ABOUT US

DIVYA PRABANDHAM

என் கருமாமணியே !

என் கருமாமணியே !

💎💎💎💎💎💎💎💎💎💎




திருவாய்மொழியில் நம்மாழ்வார் எம்பெருமானை மணியே, மணிவண்ணா, என் கருமாணிக்கமே என்றெல்லாம் அழைக்கிறார். 

மணிக்கும் எம்பெருமானுக்கும் பல வகையில் ஒப்புமை சொல்லலாம். 

💎 மணியாவது ரத்னம். அது தன்னை  பெற்றவர்களையும் பெறவிருப்பமுடையவர்களையும் இரவும் பகலும் தூங்கவிடாது. எம்பெருமானும் அப்படியே. காண்பதற்கு முன்பு முமுக்ஷுக்களை தூங்கவிடமாட்டான். கண்டபின்பும் நித்யமுக்தர்களை தூங்கவிடமாட்டான்.  

💎 ரத்னம் எவ்வளவு விலையுயர்ந்ததானாலும், சிறிதாக இருக்கும் தலைப்பு நுனியில் முடிந்து ஆளலாம் படி இருக்கும். எம்பெருமானும் அப்படியே. தன் பரத்வத்தை மறைத்து நம் இடத்தில் சௌலப்யத்தை காட்டுவான். அந்த சர்வேஸ்வரன் அசோதையின்  கண்ணிநுண் சிறுத்தாம்பில் கட்டுண்டு இருக்கவில்லையோ?

💎 ரத்னம் கடல், மலை முதலான எட்டமுடியாத இடங்களில் உள்ளது. எம்பெருமானும் அப்படியே. பாற்கடல், திருமலை போன்ற கிட்டுவதற்கு அரிதாய் இருக்கின்ற இடங்களில் சேவை சாதிக்கிறார். 

💎 ரத்னமானது தன்னை உடையவனை பெருமைபடவைக்கும். எம்பெருமானும் அப்படியே. எனக்கு இனி குறை இல்லை, என்று சொல்லுமளவுக்கு நமக்கு தைரியம் அளிப்பான்.

💎 ரத்னம் இருக்குமவர் உலக புகழ் பெறுவார். எம்பெருமானை ஆராதிக்குமவருக்கு புகழ் வற்றாது, நீங்காத செல்வம் நிறையும்.

💎 ரத்னமானது விஷயஞானம் தெரிந்த புருஷனைக்கொண்டே வாங்கப்படும். எம்பெருமானும் அப்படியே. ப்ரஹ்ம ஞானம் பெற்ற ஆசார்யனின் அனுக்ரஹத்தாலே தான் பெறமுடியும். 

💎 ரத்னம் ஒளியை விட்டு விலகாது. எம்பெருமானும் பிராட்டியை விட்டு சற்றும் நீங்கமாட்டார். "இறையும் அகலகில்லேன்' என்றல்லவோ திருமார்பில் அமர்ந்திருக்கிறார் அலர்மேல் மங்கை?

💎 ரத்னத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எம்பெருமானும் அப்படியே. அவன் நீல மணிவண்ணன். அவன் அழகை சித்திரத்திலும், கோயில் அர்ச்சாமூர்த்தியிலும், மனதிலும் பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.  பரகால நாயகியின் மணிவண்ணன், கார்முகில்வண்ணன், கடல்வண்ணன் அல்லவோ அவன்.

💎 ரத்னமானது ஒளியால் மேன்மை பெரும். எம்பெருமானுக்கு பிராட்டியால் மேன்மை பெருகும். 

💎ரத்னம் துலைந்து விட்டால் சோகமாக இருக்கும். அழுகை வரும். ஸ்ரீராமரத்னத்தை காணமுடியாமல் பரதன் கதறி கதறி அழுதாரே ! நமக்கும் பகவத் சிந்தனை இல்லையென்றால் வாழ்க்கை சோகமாக தான் இருக்கும்.

💎 ரத்னத்தை பத்திரமாக பூட்டி வைத்திருக்கிறோம். எம்பெருமான் என்ற கருமாமணியையும் எந்நாளும், எந்நேரத்திலும்,  நம் ஹ்ருதயத்துள் பத்திரமாக  பூட்டி வைத்து இன்புறுவோம்.. 

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்.

Ref: Kaanchipuram Shree PrativAdi Bhayankaram Anangachariar Swaami's DivyArtha DeepikA.

----திருமதி மாலதி பாலாஜி

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment