Showing posts with label AGARADI - PERIYA TIRUMOZHI. Show all posts
Showing posts with label AGARADI - PERIYA TIRUMOZHI. Show all posts

PERIYA TIRUMOZHI - AGARADI


A DICTIONARY OF INTERESTING WORDS IN PERIYA TIRUMOZHI
Contributed by our member Smt. Kothai Lakshmi Sreenivasan





1. அகராதி - பெரிய திருமொழி - முதல் பத்து

ஸ்வாமி தேசிகன், ப்ரபந்தஸாரத்தில் திருமங்கையாழ்வார் வைபவம் பற்றி கூறும் பொழுது, " அறிவு தரும் பெரிய திருமொழி..." என குறிப்பிடுகிறார். அதற்கேற்றாற் போல் திவ்யமான இந்த திருமொழியின் முதல் பத்தான, நூறு பாடல்களைக் கற்று, அதன் ரஸானுபவத்தில் சற்றே திளைத்துள்ளோம்.

இத்திருமொழியில் வருகிற ஆழ்வாரின் ஒருசில ஈரத்தமிழ் சொற்களின் பொருள்கள் சிலவற்றை இங்கே கண்டு, நம் தமிழ் அறிவை பெருக்கிக் கொள்வோம்.

(1-1) -- வாடினேன் வாடி

தூவி சேர் அன்னம் - இறகுகளை உடைய அன்னம்,

நெடு விசும்பு - நெடிய ஆகாசம்,

பாழியான் - மஹாபலசாலி,

செகுத்தல் - அழித்தல்,

நிலம் தரம் செய்யும் - தரைமட்டமாக்கிவிடும்,

வரிசிலை விளைவித்து - அழகிய வில்லை வளையச்செய்து,

-----------------

(1-2) -- வாலிமாவலத்து -- திருப்பிருதி

ஆலி மா முகில் - சிறுதுளிகளை உடைய காளமேகங்கள்,

அரிகுலம் - வானர ஸமூகம்,

விலங்கல் - மலை,

வேழம் - யானை,

பிலங்கொள் - குகைகளை இருப்பிடமாகக் கொண்ட,

எயிறு - பற்கள்,

அமளி - படுக்கை,

வரைசெய் மா களிறு - மலை போன்ற பெரிய யானைகளானவை,

இளவெதிர் - இளமூங்கில்,

கறி கொடி - மிளகுகளின் கொடி,

பிண்டி - அசோக மலர்கள்,

விண்டு அலர்கின்ற - விரிந்து மலர்கின்ற.

--------------------

(1-3) -- முற்றமூத்து -- திருவதரி

 பேய்ச்சி - பூதனை (1-3),

தண்டு காலாவூன்றி - தடியைக் காலாகக் கொண்டு ஊன்றி,

ஐக்கள், ஐயார் - கோழைகள்,

கண்டல் வேலி - தாழை செடிகள் மண்டிய வேலி,

---------------------------

(1-4) -- ஏனமுனாகி -- திருவதரியாச்சிரமம்

உரு - மான்,

கானிடை உரு - தண்டகாரண்யத்தில் வந்த மான்,

முதுநீர் கங்கை - புராதனமான ஆகாச கங்கை,

அயன் - பிரமன்,

துப்பு - சாமர்த்தியம்,

இருநிதிக்கிறைவன் - இராவணன் ( குபேரனிடமிருந்து சங்கநிதி, பத்மநிதிகளைக் கவர்ந்தவன் இராவணன்),

கொழுஞ்சுடர் - சூரியன்,

செம்பொன் செய் விலங்கல் - மேருமலை,

வேலை - கடல்,

வெம்திறல் களிறு - மிடுக்கான ஐராவத யானை,

பொன்நிறத்து உரவோன் - ஹிரண்யகசிபு,

அவனியாள் - பூமிமாதா,

பனுவல் - சாஸ்திரம்,

---------------------

(1-5) -- கலையும் -- திருச்சாளக்கிராமம்

கலை - மான்,

ஏனோர் அஞ்ச - சத்ருக்களான அஸுரர்கள் பயப்படும் படியாக,

பரிய - பருமை - தடித்த சரீரத்தை உடைய,

பழனத்து - நீர் நிலங்களில்,

--------------------

(1-6) -- வாணிலாமுறுவல் -- நைமிசாரணியம்

சிறு நுதல் - சிறிய நெற்றி (1-6),

வெண்திரை அலமர - வெளுத்த அலைகள் கலங்கும் படி,

துற்று - ஒரு கவளம்,

கொடுமிறை - கொடிய வருத்தங்கள்,

உம்பர் - நித்ய ஸூரிகள்,

ஏதம் - துக்கம்,

ஓதம் நீர் வையகம் - கடல் சூழ்ந்த இப்பூ மண்டலம்,

----------------------

 (1-7) -- அங்கண் ஞாலம் -- திருச்சிங்கவேள் குன்றம்

வள் உகிரால் - கூர்மையான நகங்கள்,

ஆளி - சிங்கம்,

செல் சாத்து - வழிப்போக்கு ஜனங்களின் சமூகம்,

ஆகம் - உடல் - சரீரம்,

ஓய்ந்த மாவும் - அங்கும் இங்கும் அலைந்து ஓய்ந்து போன மிருகங்கள்,

உழுவை - புலிகளானவை, 

அதர் - வழி,

நெற்று - உலர்ந்த பழங்கள்,

சில்லி - சுவர்க்கோழி,

---------------------

 (1-8) -- கொங்கலர்ந்த -- திருவேங்கடம் -1

தெள்ளியார் - தெளிந்த அறிவை உடைய ஞானிகள்,

வண்கையான் - விசேஷமாக தானம் செய்யும் கைகளை உடையவன்,

ஒண்திறல் - மஹாபலசாலி,

இதணம் - காவற் பரண்,

வார் பொழில் - விசாலமான சோலைகள்,

சங்கை இன்றி - சந்தேகமில்லாமல்,

வண் தமிழ் - அழகிய தமிழ்,

--------------------

(1-9) -- தாயே தந்தை -- திருவேங்கடம் - 2

வேய் ஏய் - மூங்கில்கள் நெருங்கி உள்ள இடம்,

விரை ஆர் - பரிமளம் விஞ்சி இருக்கும்,

அலந்தேன் - பல கஷ்டங்களை அனுபவித்து,

கரிசேர் - யானைகள் மிகுந்திருக்கும்,

கல்தேன் பாய்ந்து - மலை முகடுகளிலிருந்து தேன் பாய்ந்தொழுகுவது,

--------------------

 (1-10) -- கண்ணார் கடல்சூழ் -- திருவேங்கடம் - 3

சரம் - அம்பு,

அலங்கல் - மாலை,

விலங்கல் - மலை,

அண்டா! - தேவாதி தேவனே!

( வாமனராய் இரண்டடியிலே அனைத்து அண்டங்களையும் அளந்தவர்),

மன்னாவிம்மனிசப்பிறவி - நிலையில்லாத மனித ஜென்மம்,

ஆனேழ் விடைசெற்ற - 7 ரிஷபங்களைக் கொன்ற,

தரளம் - முத்து,

வாள் மணி - ஒளியுள்ள ரத்னங்கள்

----------------------------------------------------------

2. அகராதி -- பெரிய திருமொழி -- இரண்டாம் பத்து

நமஸ்காரம்.  பெரிய திருமொழியின் முதல் பத்தில் அநுபவித்தது போல் , தற்போது இரண்டாம் பத்திலும் ஆழ்வார் அழகாகக் கொடுத்துள்ள செந்தமிழ்ச் சொற்கள்  சிலவற்றின் பொருட்களைக் காணலாம்.

(2-1) -- வானவர் -- திருவேங்கடம்-4

மீமிசை அண்டம் - நித்ய விபூதியான திருநாடு,
விசும்பு - பரமபதம்,
கோவி நாயகன் - கோபிகைகளின் நாதன்,
கொண்டல் - மேகம்,
போதி - அரசமரம்,
பிண்டி - அசோக மரம்,
கவரிமாக்கணம் - கவரிமான்களின் கூட்டம்,
தருக்கம் - தர்க்கம், யுக்தி வாதங்கள்,
அலக்கண் - துன்பம், மனவருத்தம்,
வேய்கள் - மூங்கில்கள்.

(2-2) -- காசையாடை -- திருவெவ்வளூர் 

காசையாடை - காஷாய வஸ்திரம்,
தையலாள் - அழகிலே சிறந்தவள்,(இங்கு சீதாபிராட்டியைக் குறிக்கிறது ),
ஆதிமன்னர் - பாண்டவர்கள்,
சாலநாள் - நெடுநாள்கள்,
அப்பு - ஜலம், நீர், 
சாமிஅப்பன் - ஸாம வேதத்தில் ப்ரஸ்தாபிக்கப்பட்ட ஸ்வாமி.

(2-3) -- விற்பெருவிழவும் -- திருவல்லிக்கேணி

விற்பெருவிழவு - தனுர் யாகமாகிய பெரிய விழா,
வேழம் - யானை(இங்கு குவலயாபீடம் என்னும் யானையைக் குறிக்கும்)
பற்றலர்  - சத்ருக்கள்,
சிற்றவை பணி  - சிறிய தாயான கைகேயியின் வரமாகிய பணி,
தானவர் கூற்று - அசுரர்களுக்கு யமன் போன்றவன்,
அந்தமில் வரை - முடிவில்லாத பெரிய மலை, --இங்கு கோவர்த்தன மலையைக்குறிக்கிறது,
நற்புவி தனக்கிறைவன் - ஸ்ரீ பூமிபிராட்டியின் நாதன்,
சந்தமல் குழலாள் - அழகிய கரிய கூந்தலை உடையவள், இங்கு த்ரௌபதியைக் குறிக்கிறது,
ரவியின் கதிர்கள் - சூரிய கிரணங்கள்,
பிறை எயிறு - பிறை போன்ற பற்கள் ,
பேழ்வாய் - பெரிய வாய், 
கரா - முதலை,
புள்ளூர்ந்து - பெரிய திருவடியான, கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டு,
வாவி - குளம், நீர்நிலைகள்.

(2-4) -- அன்றாயர் -- திருநீர்மலை

ஆயர்குலக்கொடி - நப்பின்னை,
அணிமாமலர் மங்கை -  அழகிய மலரில் தோன்றிய பெரிய பிராட்டி,
ஆர்அழல் - அக்நி பகவான்,
அலம் - கலப்பை,
பொறை - பாரம்,
பிச்சிறுபீலி பிடித்த - கையில் மயிலிறகைப்பிடித்த ஜைனர்கள்,
நிச்சம் - தினமும்,
வண்டறை - வண்டுகள் ரீங்காரம் செய்யும்,
அமரில் கடமாகளியானை வல்லான் - போரில்  மதயானைகளை நடத்த வல்லவர் .

(2-5) -- பாராயது - திருக்கடல்மல்லை

போர் ஆனை - போர் செய்ய வந்த யானை(குவலயாபீடம்),
கார்ஆனை -பெரிய கஜேந்திரனது,
பேய்ச்சி - பேய் மகளான பூதனை,
வரை மீகானில் - மலைப்பகுதியின் மேலுள்ள கானகத்தில்,
திரிசகடம் - உருளுகிற சகடம்(சகடாசுரன்),
மறி - மாயாமிருகம், ஆண்மான்(மாரீசனான மான்),
பணங்கள் மேவி கிடந்தான் - திருவனந்தாழ்வாரின் விரிந்த படங்களில் பள்ளி கொண்டவர்,
தடம் ஆய்ந்த - தடாகங்கள், நீர் நிலைகள் நிறைந்த. 

(2-6) -- நண்ணாத - திருக்கடல்மல்லை -2

பெண் ஆகி அமுதூட்டும் - பெருமாளின் மோகினி அவதாரத்தைக் குறிக்கிறது,
வானத்திலவர் - தேவர்கள், நித்ய ஸூரிகள்,
கச்சிக்கிடந்தான் - காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் யதோக்தகாரியாக சயனித்தவர்,
பகடு - எருது, யானை,
இப்பாடலில் எருதினைக்குறிக்கிறது,
நெடுமறுகின் - நீண்ட வீதிகளை உடைய.

(2-7) -- திவளும் -- திருவிடவெந்தை

அரிவை - நித்ய யௌவனமுடையவள்,
சாந்து கொண்டு - சந்தனத்தால்,
ஏதலர் - சத்ருக்கள்,
ஆம்பல் - பல பொருள்கள் உடைய சொல் - இங்கு புல்லாங்குழல் எனும் பொருள் காண்க.

(2-8) -- திரிபுரம் - திருவட்டபுயம்

வெம்திறல் வீரர் - மிகவும் வலிமை கொண்ட வீரர்,
 செந்தமிழ் பாடுவார் - அழகிய தமிழ் பாசுரங்கள் பாடிய முதலாழ்வார்கள்,
வாளி - அம்பு,
வெண்மருப்பு - வெளுத்த கொம்பு,
இருண்டஅம்புதம் - கார்மேகம்,
வெஞ்சுடராழி - மிக்க பிரகாசமான சோதியை உடைய சக்கரம்,
கற்பமும் - கல்ப ஸூத்ரங்கள்,
கலைகள் - இங்கே சாஸ்திரங்கள் என்னும் பொருளில் காண்க,
முழுசி வண்டு - தேனில் முழுகிய வண்டுகள்,
ஓவிநல்லார் - நல்ல ஓவியர், சித்திரம் எழுதுபவர்கள்,
காமருசீர்கலிகன்றி - விரும்பத்தக்க குணங்கள் பெற்ற கலியன், --ஆழ்வார் தன்னையே இவ்வாறு குறிப்பிடுகிறார்.

(2-9) -- சொல்லுவன் -- திருபரமேச்சுரவிண்ணகரம்

தன்உந்திதார்மன்னு -தன் உந்தித்தாமரையலிருந்து உண்டாகப் பெற்ற,
திண்சிலையோன் - வலிமையான வில்லை உடைய பல்லவன்,
விண்டவர் - பகைவர்கள்,
இரிய - சிதரியோடும்படி,
பாம்புடைப்பல்லவர்கோன் - நாகத்தினைக் கொடியாகக்கொண்ட பல்லவராஜன்,
சலமொடு -கபடமான வகையில்,
குடைத்திறல் - வெண்கொற்றக்குடை உடைய சக்ரவர்த்தித் திருமகன்,
விடைதிறல் - காளை போல் வலிமை பெற்றவன்,
பிறைவாள்உடை நுதல் பின்னை - சந்திரன் போல் ஒளியையுடைய நெற்றி கொண்ட நப்பின்னை.

(2-10) -- மஞ்சாடு -- திருக்கோவலூர் 

சோமு செய்ய - ஸோம யாகங்கள் செய்ய,
கோள் முதலை - வலிமையுள்ள முதலை,
மாடம் தோறும் - ஒவ்வொரு வீடுகளிலும்,
மறை வளர - வேத கோஷம் ஓங்கிட,
சிறை - இச்சொல் பல பொருள்கள் கொண்டது. இங்கு நீர்நிலைகள் என்று பொருள் கொள்க,
தடங்கண்கள் - பெரிய திருக்கண்கள்,
வியன்கலை எண் தோளினாள் - அழகிய மான் வாகனம் கொண்ட எட்டு தோள்களை உடைய துர்கா தேவி,
தறி - யானை கட்டும் கம்பம்,
பண்டு - முற்காலத்தில்,
புரந்தரன் - இந்திரன்,
வாரணம் கொள்இடர் கடிந்த மால் - கஜேந்திரனின் துயர் களைந்த திருமால்.
அளகைக்கோன் - அளகாபுரி மன்னன் - குபேரன்

தெரிந்த பெயர்களும் ஆழ்வாரின் அற்புதமான வர்ணனைச் சொற்களும்


ஆழ்வார் பலப்பல இடங்களில் அழகான வர்ணனைச் சொற்கள் பயன்படுத்தி உள்ளார்.  ஒரு சிலவற்றை இங்கே காணலாம்.

க்ருஷ்ணன் - நந்தனார் களிறு,

துரியோதனன் - அந்தகன் சிறுவன்,

நப்பின்னை - ஆயர் பாவை,

அர்ஜுனன் - இந்திரன் சிறுவன்,

சூரியன் - பகலோன்

கண்ணன் - ஆயர்நாயகன்,

ப்ரம்மா - ஆடுதாமரையோன்,

பரமசிவன் - வண்டுன் தொங்களப்பு நீள்முடியான் & போர் ஏறு ஒன்றுடையான்,

மகாலக்ஷ்மி - பதுமத்தலர் மகள் & முந்நீர் மடந்தை,

பூமிப்பிராட்டி - தரணி மங்கை,

சரஸ்வதி-  நா மங்கை,

குபேரன் - அளகை கோன் ( குபேரனின் பட்டணத்தின் பெயர் அளகாபுரி).


3. அகராதி - பெரிய திருமொழி - மூன்றாம் பத்து

மிக அதிகமான திவ்ய தேசங்கள் செல்லும் யாத்திரையாகவும், மிக அதிகமான நாட்களில் பிரயாணப்படும் அனுயாத்திரையாகவும், திருமங்கையாழ்வாருடன் பயணித்துக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் நமஸ்காரம்.

தற்போது பயணித்து முடித்த நடுநாட்டுத்திருப்பதி - திருவஹீந்திரபுரம் முதலாக திருநாங்கூர் தலங்களில் ஒன்றாக அரிமேயவிண்ணகரம் வரை ஆழ்வாரின் மங்களாசாசனமாக கண்டு களித்தோம். அந்த பெரிய திருமொழி--- மூன்றாம் பத்து பாடல்களில்  ஆழ்வார் நமக்கு கொடுத்துள்ள இனிய தமிழ் சொற்கள் சிலவற்றின் அர்த்தானுபவத்தை பார்ப்போம்.

3-1 -- இருந்தண் மாநிலம் ( திருவஹீந்திரபுரம்)

இரு தண் மாநிலம் - மிக குளிர்ந்த பெரிய நிலம்,

தேறல் அருந்தி - தேனைக் குடித்து,

அளிகுலம் - வண்டுகளின் கூட்டம்,

பரன் - பரம புருஷன்,

மாதவிப் பந்தல் - குருக்கத்திப்பூ பந்தல்,

மால் வரை மாமதிள் - ஆகாசம் வரை உயர்த்த மதிள்கள்,

விலங்கல் - மலை,

தடம் ஆர் - தடாகங்கள் நிறைந்த,

வரை வளம் திகழ் மதகரி - மலைக்கு அழகு செய்யும் மதயானைகள்,

மருப்பொடு - தந்தங்களையும்,

செழுநதி - அழகிய ஆறு.

~~~~~~~~~~~~~~~~

3-2 -- ஊன்வாட ( திருச்சித்ரகூடம்) 

கான் ஆட - சோலைகள் அசைந்தாட, 

மஞ்ஞை கணம் - மயில்களின் கூட்டம்,

மாடே - பக்கத்திலே,

முறையால் வளர்த்த தீ ஓங்கு - க்ரமமாக அனுஷ்டித்த அக்னி காரியங்கள்  பெருகிய,

சினத்துப்புனக்கேழல் -  கோபம் மிகுந்த பெரிய காட்டு வராக மூர்த்தி,

கவை நா அரவு - பிளவுபட்ட இரட்டை நாவை உடைய திருஅனந்தாழ்வார்,

கோ மங்க - க்ஷத்திரிய மன்னர்கள் அழியவும்,

பூ மங்கை - மகாலக்ஷ்மி,

புல மங்கை - பூமிப்பிராட்டி,

புகழ் மங்கை - கீர்த்தி லக்ஷ்மி,

நெய் வாய் அழல் அம்பு - கூர்மையான நுனி கொண்ட அக்னியைச்  சொரிகின்ற அம்பு,

முந்நீர் - சமுத்திரம்,

மௌவல் குழலாய்ச்சி - முல்லைப் பூவை குழலில் சூடிய நப்பின்னை பிராட்டி,

'நிவா' - 'வெள்ளாறு' எனும் ஆற்றின் பெயரை ஆழ்வார் இவ்வாறு குறிப்பிடுகிறார்.


3-3 -- வாடமருதிடை (திருச்சித்ர கூடம்)

ஆடல் நல்மா உடைத்து - ஆடிக் கொண்டு வந்த கொடிய குதிரையைக் கொன்றவன், 

தண் தடம் புக்கு - குளிர்ந்த கரையிலே சென்று,

முளைத்த எயிறு - முளைத்த பற்களை உடைய,

அழல் நாகத்து - விஷ அக்னியை உமிழும் காளிய நாகம்,

மாகடல் - பெரிய கடல்,

கருங்குழல் ஆய்ச்சி  - கரிய கூந்தலை உடைய நப்பின்னை பிராட்டி,

பருவரை - பெரிய கோவர்த்தன மலை,

தெய்வப் புள் - திவ்யமான பக்ஷியாகிய கருடாழ்வார்,

பைங்கணிரண்டு எரி கான்ற - பசுத்த இரு திருக்கண்கள் நெருப்பை உமிழ.

~~~~~~~~~~~~~~~~

3-4 -- ஒரு குறளாய் ( திரு காழிச் சீராம விண்ணகரம்)

நக்கன் - திகம்பரரான ருத்ரன், 

அளைவாய் - புற்று,

வை அணைந்த - கூர்மை பொருந்திய,

பொன்னன் - ஹிரண்யாசுரன்,

நின்மலன்  - குற்றமற்றவன்,திருச்

தரளம் - முத்து,

பொருவு இல் - ஒப்பற்ற,

செறுவில் - யுத்தத்தில்,

தெட்ட பழம் - நன்கு பழுத்த பழம், { இந்த சொல் சீர்காழி பகுதியில் பேசப்படும் ஒரு திசைச் சொல் ஆகும்},

கைதை தோடு - தாழை மடல்கள்,

அடையார் சீயம் - சத்ருக்களுக்கு ஸிம்ஹம் போன்றவர்.

3-5 -- வந்துனது ( திருவாலி)

மாமயில் கணம் - அழகிய மயில்களின் கூட்டங்கள், 

வேலைத்தலை - திருப்பாற்கடல்,

அகன் பணைகள் -  விசாலமான தடாகங்கள்,

மரமெய்த மாமுனிவா - ஏழு ஆச்சாமரங்களையும் ஒரே அம்பால் துளைத்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி,

மலி அலவன் - பெரிய நண்டுகள்,

வேதியா! - வேதம் ஒன்றினாலேயே அறியப்படும் பரம்பொருள்,

வண்டு புல்லி - வண்டுகள் ஒன்றோடொன்று இணைந்து.

3-6 -- தூவிரிய (திருவாலி)

மலர் உழக்கி - புஷ்பங்களை மிதித்து, 

தீ விரிய - நிறைவான அக்னி காரியங்கள் பரவும் படி,

பிணி அவிழும் - கட்டு அவிழ்கின்ற,

மீன் ஆய கொடி நெடுவேள் - மகர த்வஜனான மன்மதன்,

தார் ஆய தண் துளபம் - குளிர்ந்த துளசி மாலையிலுள்ள,

புட்பாகன் - கருட வாகனம் கொண்ட பெருமாள்,

சிலையாளா! - சார்ங்க வில்லை ஆளுபவரே!.


3-7 -- கள்வன் கொல் ( திருவாலி)

படிறு  - தீம்பு ( பெண்களைக் கவர்தல் போன்ற தகாத வேலைகள்), 

பரக்கழிந்து - பெரும் பழிக்கு இடமாகி,

வளை ஊதி - சங்கை  ஊதுபவனாக,

வேய் அன்ன தோள் - மூங்கில் போன்ற தோள்,

வன்துணை - சிறந்த துணை,

முற்றில் - சிறு முறம்,

வாவி - நீர் நிலை.

3-8 -- நந்தா விளக்கே ( திரு நாங்கூர் மணிமாடக்கோயில்)

மிழற்ற - ஆலாபனை பண்ணுதல்,

விதலை - பயத்தில் அஞ்சி நடுங்குதல்,

விண்ணணவு - விண் அளவு ஓங்கிய,

மதலை - கொடுங்கை  ( கோபுரத்தின் மேல் உள்ள பகுதி),

மருப்பு - யானை தந்தங்கள்,

வல்லி - மெல்லிய அழகான பூங்கொடிகள்,

பண்ணேர் மொழி - பண் இசை போல் ஒத்த பேச்சு மொழி,

இள மேதிகள் - இளைய எருமைகள்,

பருவாய் கழுது - பெரிய ராக்ஷஸ தன்மை கொண்ட பூதனா,

சிற்றில் - சிறுமியர் கட்டிய சிறு சிறு மணல் வீடு,

விகிர்தா! - விலக்ஷண புருஷனே!,

தொகை புண்டரீகம் - செழுமையான தாமரை மலர்,

விண் தோய் நெடு வெண்குடை - விண்ணை முட்டும் நீண்ட வெண்கொற்றக்குடை.


3-9 சலங்கொண்ட ( திரு வைகுந்த விண்ணகரம்)

சலம் கொண்ட - தப்பு எண்ணம் கொண்ட,

வண் பொழில் - அழகிய சோலைகள்,

அவனி - பூமி,

அரன் - ருத்ரன்,

அரக்கர் குலக்கொடி - சூர்ப்பனகை,

வங்க மலி - மனக்கலக்கம் நிறைந்த,

செழு பணை - அழகிய தடாகங்கள்,

விசும்பு - பரமபதம்,

மலி தண்டு - பொருந்திய கௌமோதகி.


3-10 -- திருமடந்தை (திருஅரிமேய விண்ணகரம்)

தடங்கள் தொறும் - தடாகங்கள் தோறும், 

குரை கடலை - சத்தத்துடன் கூடிய சமுத்திரம்,

உம்பர் - தேவர்கள்,

அம்பு அனைய கண் - அம்பு போன்ற கூர்மையான கண்,

மிகு பெரு வரத்த இரணியன் - முடிவில்லாத பெரு வரங்கள் பெற்றிருந்த இரணியன்,

சிறு குறளாய் - சிறுத்த வாமன ரூபியாய்,

சேணிடம் கொள் கமலம் - ஆகாசம் உள்ள இடமெங்கும் ஓங்கி வளர்ந்த தாமரைப் பூக்கள்,

காலிகள் - பசுக்கள்,

தொழுதி - பறவைகளின் சத்தங்கள்.

----------------------------------------------------------------------


4. அகராதி -- பெரிய திருமொழி -- நான்காம் பத்து


பெரிய திருமொழியில் இந்த நான்காம் பத்து பாடல்களில் மட்டுமே, ஆழ்வார் , _பத்து_ திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். மேலும் திருநாங்கூர் 11 திருத்தலங்களும் திருமங்கை ஆழ்வாரால் மட்டுமே பாடப் பட்டதாக அறிகிறோம்.அந்த வகையில் தனிச்சிறப்பு வாய்ந்த பாடல் தொகுப்பில் ஆழ்வாரோடு சேர்த்து நாமும் பத்து திருத்தல எம்பெருமான்களைத் தரிசித்து , அந்தந்த ஊர்களின் சிறப்புகளையும் கண்டு மகிழ்ந்தோம். இவற்றிற்கு மெருகூட்டும் வகையில்  ஆழ்வார் அளித்துள்ள அழகழகான தமிழ் சொற்களின் பொருளடக்கத்தை சிறிது காண்போம். 

(4-1) -- போதலர்ந்த பொழிச்சோலை -- திருத்தேவனார் தொகை

மா வரும் திண் படை - குதிரை மேல் வருகிற வலிமையான ஆயுதங்கள் கொண்ட படை,

வான் நாடும் மண் நாடும் - நித்ய விபூதியும், லீலா விபூதியும்,

மலர்ச்சதுமுகன் - தாமரைப்பூவிலிருந்து தோன்றிய ப்ரம்மா,

கனகம் - பொன்,

சேல் உகளும் - மீன்கள் துள்ளி விளையாடும்,

சாலி வளம் - வளம் மிக்கதான நெல் பயிர்கள்,

ஓடாத ஆளறி - நாட்டில் சாதாரணமாக நடமாடாத ஒரு அதிசய  நர - ஸிம்ஹ மூர்த்தி (ஆள்-அரி),

காரார் திண் சிலை - வைரம் பாய்ந்த திண்மையான வில் (ஜனக மகாராஜாவிடம் இருந்த வில்),

கும்ப மிகு மதயானை - பெரிய மத்தகத்தை உடைய மதயானை (குவலயாபீடம்).

(4-2) -- கம்பமாகடல் -- வண் புருஷோத்தமம்

சூதகம் - மாமரங்கள்,

பண அரங்கில் - காளிய நாகத்தின் தலையில் உள்ள படங்களை நாட்டிய அரங்கமாய் கொண்டு,

வானவர் கோன் - தேவேந்திரன்,

உயர் சாலிகள் - ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்ற செந்நெல் பயிர்கள்,

வாணன் - பாணாசுரன்,

பகலவன் - சூரியன்,

குமுதங்கள் - ஆம்பல் மலர்கள்,

மா பதுமங்கள் - சிறந்த பெரிய தாமரை மலர்கள்,

வெம் சினத்து அரி - உக்ர நரஸிம்ஹர்,

தன் குருளை - தன் குட்டியை,

பண்ணாளார் - பண் இசையோடு கூடிய.


(4-3) -- பேரணிந்துலகத்தவர் -- செம்பொன் செய் கோயில்

பேரின்ப இன்ப வெள்ளத்தை - ஆனந்தக் கடலாய் இருப்பவர்,

திடமொழி மறையோர் - சொன்ன சொல் மாறாத ஸத்ய சீலர்கள்,

 வசை அறுகுறளாய் - குற்றமற்ற வாமன மூர்த்தி,

அசைவறும் அமரர்கள் - நித்யசூரிகள்,

காமனைப் பயந்தான் - மன்மதனின் அம்சமாக மகனைப் பெற்ற கண்ணபிரான்,

கடிமதிள் - அரணான மதிள்சுவர்,

வாளி - அம்பு,

அன்றிய வாணன் - படைத்துக் கொண்டு போருக்கு வந்த பாணாசுரன்,

மங்கையார் - திருமங்கை நாட்டுத் தலைவனான ஆழ்வார்.

(4-4) -- மாற்றரசர் மணிமுடியும் -- திருத்தெற்றியம்பலம்

பகு வாய் நண்டு - விரிந்த வாயை உடைய நண்டு,

குரம்பை - குடிசைகள்,

தோக்கை - புடவைத் தலைப்பு,

முகத்திரண்டு சிலை - முகத்தில் உள்ள வில் போன்ற இரண்டு புருவங்கள்,

பொங்கு இலங்கு புரிநூலும் - சிறந்து விளங்குகின்ற யஜ்ஞோபவீதம்,

தோலும் - கிருஷ்ணாஜினம்,

இலங்கிய நான்மறை - ப்ரமாணங்களாய் சிறந்து விளங்குகிற நான்கு வேதங்கள்,

தாள் வரையும் - பக்கத்துச் சிறு மலைகளை உடைய பெரிய மலைகளும்,

ஆழி மிகும் - கடல் பெருகும் படியான,

அகட்டில் - திருவயிற்றில்,

சேன் விசும்பில் - பரமபதத்தில்.

(4-5) -- தும்புடைப் பனைக்கை வேழம் -- திருமணிக்கூடம்

தூம்பு - துளைகள்,

கவ்வை - ஆரவாரம் செய்பவளாய்,

நாத்தொழில் மறைவல்லவர்கள் - நாவுக்கு வேலையாக வேதங்களை கற்ற வல்லவர்கள்,

மருப்பு - தந்தம்,

கேழல் - வராக அவதாரம்,

பங்கயம் - தாமரைப்பூ,

வெம்சுடர் - சூரியன்,

வண்தார்க் கலியன் - அழகிய மாலையை அணிந்த ஆழ்வார்.

(4-6) -- தாவளந்துலகமுற்றும் -- திருக்காவளம்பாடி

உருத்து - கோபங்கொண்டு,

கதிர்முடி - ஒளி பொருந்திய கிரீடம்,

முனை முகத்து - யுத்த களத்திலே,

சுரும்பு - வண்டுகளானவை,

தடவரை - பெரிய மலைகள்,

காவின் - சோலைகளினுடைய,

நரைகமழ் - பரிமளம் வீசுகின்ற,

மருப்பு - தந்தங்கள்,

மதகரி - மதயானை (குவலயாபீடம் யானையை இங்கு குறிக்கிறது),

கடிது - சீக்கிரமாக,

புரந்திரன் - இந்திரன்,

சந்தமாய் - அறுவகை சந்தஸ்களுக்கும் காரணமானவனாய்,

மாவளம் - மிக அதிகமான செல்வவளம்.

 (4-7) -- கண்ணார் கடல்போல் -- திருவெள்ளக்குளம்

நண்ணார் முனை - நண்ணாதவர்கள் - பகைவர்கள் கூடிய யுத்த களத்திலே,

கொந்தார் - பூங்கொத்து களம் அதிகம் உள்ள,

கானார் கரி - காட்டிலே வளர்ந்த கொழுத்த யானை (குவலயாபீடம்),

ஒசித்த - முறித்த,

களிறே! - யானை போல் செருக்குற்ற பெருமானே!,

பாற்று - சிதறடிக்க வேணும்,

வேடார் - வேடர்கள் நிறைந்த,

சேலார் வயல் சூழ் - மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட,

கல்லின் மலிதோள் -    மலையைக் காட்டிலும் வலிமைபெற்ற புஜங்கள்.

 (4-8) -- கவளயானை -- திருபார்த்தன்பள்ளி

தாமரையாள் கேள்வன் - லக்ஷ்மி நாதன்,

செண்டு - இயல்பு, ஸ்வபாவம்,

பாடகம் சேர் - பாதச்சிலம்பு அணிந்த,

என் மடந்தை - என் பெண்ணானவள்,

செங்கண் மால் - செந்தாமரைக்கண்ணனான திருமால்,

ஒண்சுடரோடு - விளங்குகின்ற சந்திர சூரியர்கள்.

 (4-9) -- நும்மைத் தொழுதோம் -- திருஇந்தளூர்

கடிதாக்கருமமருளி -  சீக்கிரமாக ஏதேனும் கைங்கர்யம் நியமித்து,

அந்தண் ஆலிமாலே! - அழகிய குளிர்ந்த திருவாலி பெருமாளே!,

காசின் ஒளியின் - பொன்காசின் ஒளியைக் காட்டிலும்,

நுந்தம் அடிக்கள் - தேவரீருடைய திருவடிகளை,

வாசி வல்லீர் - வித்தியாசம் பார்க்கிறீர்,

சீராரின் சொல்மாலை - சிறந்த மதுரமான சொற்கள் உடைய பாடல்கள்,

காரார் புறவின் - மேகங்கள் படிந்த தோப்புகளை உடைய.

(4-10) -- ஆய்ச்சியரழைப்ப -- திருவெள்ளியங்குடி

இணை மருதிருத்து - இரட்டை மருத மரங்கள் முறிந்து போகும் படி செய்த,

மண்ணியின் தென்பால் - மண்ணி யாற்றங்கரையின் தெற்கு பகுதியில்,

அலைகடல் அடைத்திட்டு - அலைகடலிலே அணைகட்டி,

பொதும்பிடை - பொந்துகளில்,

வரிவண்டு மிண்டி - அழகிய வண்டுகள் நெருங்கி இருந்து,

அண்டம் நின்றதிரும் - ஆகாசம் வரை சென்று அதிரும் படியாக,

கதிரணவும் - சூரிய மண்டலத்தைத் தொட்டுக்கொண்டு,

கூற்றிடை செல்ல - யமனிடம் சென்று சேரும் படியாக,

அரந்தை - துன்பம்,

வெள்ளியார் வணங்க - சுக்கிரன் வந்து வணங்க,

அரியாய் - நரசிங்கமாய்,

கடியுடைக்கமலம் - நறுமணம் மிக்க தாமரை.

ஆழ்வார் தம் பாசுரங்களில் அள்ளித் தந்துள்ள தீந்தமிழ் சுவையை அனுபவித்து வருகிறோம். 

பெண் பாவனையிலும்,  தாய்ப்பாசுரங்களாகவும்மற்றும் இந்தளூர் பாடல்களில் ஊடல் சுவையும் ஆழ்வாரின் தமிழ் இலக்கிய நயத்தை அருமையாக காட்டுகிறது.


5. அகராதி -- பெரிய திருமொழி--- ஐந்தாம் பத்து

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களை சேவித்த பின் ஆழ்வார் நம்மை அருமையான பெருமாள் அனுபவத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். திருவரங்கம் என்னும் திவ்யமான க்ஷேத்திரத்தை 50 பாசுரங்களில் விஸ்தாரமாக அனுபவித்தோம். ஆழ்வார் ஒவ்வொரு பாசுரத்தில் கொடுக்கும் தத்வார்த்தங்களும், இயற்கை வர்ணனனையும் மற்றும் இதிகாச நிகழ்வுகளும் மிகவும் அருமை என்றால், ஆழ்வாரின் _தீந்தமிழ் சுவையை_ விளக்க வார்த்தைகளே இல்லை. ஐந்தாம் பத்தில் வரும் ஒரு சில தமிழ் சொற்களின் அர்த்தானுபவத்தை சிறிது பார்ப்போம்.

(5-1) -- அறிவதறியான் -- திருப்புள்ளம்பூதங்குடி திவ்யதேசம்

சுரும்பு - ஒரு வகை சாதி வண்டுகள்,
மஞ்ஞை - மயில்,
மன்னி அமரும் இடம் - இடைவிடாது நித்ய வாஸம் பண்ணும் இடம்,
போதகம் - யானை,
கள்ளக்குறளாய் - கபடமாக வந்த வாமன மூர்த்தி,
பொள்ளைக்கரத்த - துளையை உடைய துதிக்கை கொண்ட,
மேவா அரக்கர் - இயற்கையாகவே பகைமை உணர்வு கொண்ட அரக்கர்கள்,
சரம் - அம்புகள்,
தெங்கின் பழம் - தேங்காய்,
வெற்பு - மலை (இங்கு கோவர்த்தன மலையைக் குறிக்கிறது),
ஆரல் - ஆரல் மீன்கள்,
பொய்யா நாவில் மறை வளர் - பொய் கூறி அறியாத நாவினால் வேதம் கூறி வரும் அந்தணர்கள்,
கற்றார் பரவும் - கற்றவர்களால் கொண்டாடப் படும்,
அமலன் - பரம பவித்திரனான பெருமாள்.

(5-2) -- தாந்தம் பெருமையறியார் -- திருக்கூடலூர் திவ்யதேசம்
--------------------------------------
செறுந்திண் திமிலேறு - கொழுத்த திடமான பெரிய திமில் முகப்புகளை உடைய ரிஷபங்கள்,
நறுந்தண்டீம் தேன் - மதுரமான குளிர்ந்த இனிய தேன்,
கூற்றேருருவின் குறளாய் - காண்பார் எல்லோரும் கொண்டாடும் விதமாக விலக்ஷணமான வாமன மூர்த்தி,
சுடர் சென்றணவ - ஓங்கி உலகளக்கும் போது திருமேனியானது சூரிய மண்டலத்தளவும் சென்று ஸ்பர்சிக்க வளர்ந்து,
கொண்டலதிரும் - மேக முழக்கம்,
தக்கன் - தக்ஷ ப்ரஜாபதி,
எங்கள் இடு - குருநுண் மணல்கள் உள்ள இடமெங்கும்,
கொக்கின் பழம் - மாம்பழங்கள்,
தெங்கின் மேல் நின்ற - தென்னை மரங்களின் மேல் இருக்கும்,
குருகு - கொக்கு,
கோவைத்தமிழ் - அழகாக கோர்க்கப்பட்ட மாலை போன்ற தமிழால்,
பாவை - பாசுரத்தொகுப்பு.

(5-3) --- வென்றிமா மழுவேந்தி -- திருவெள்ளறை திவ்யதேசம்
-----------------------------------
மா மழு - பெரிய கோடாலி,
மௌவல் - முல்லைப் பூ,
மூவெழுகால் - இருபத்தி ஒரு தலைமுறை,
வசை இல் - குற்றமற்ற,
உயர்கொள் - ஓங்கி வளர்ந்திருக்கும்,
அம்மலரயற்கு - மலரில் தோன்றிய பிரமன்,
வெய்யன் ஆய் - மிகவும் க்ரூரனாக  இருந்து வந்த,
தேனின் வாய் மலர்முருகுகுக்கும் -  வண்டுகளின் வாய்களிலே தேனை பெருக்கும் , (முருகு - தேன்)
மதுகரம் - ஆண்வண்டு,
கேதகை - தாழைகள்,
சூதகம் - மாமரங்கள்,
பிண்டி - அசோக மரம்,
எஞ்சலின்றி - குறைவின்றி.

 (5-4) -- உந்தி மேல் நான்முகனை -- {5-4 முதல் 5-8 வரை} திருவரங்கம் பெரிய கோவில்
-
----------------------------------
இமையோர்கள் தாதைக்கு - நித்யஸூரிகளுக்கு தலைவனான,
சந்தினோடு - சந்தனக்கட்டைகளோடு,
தையனல்லார் - நல் தையலார் - நல்ல அழகுடைய ஸ்த்ரீகள்,
விறல் வாள்அரக்கன் - பலம் பொருந்திய வாட்படை வல்லவனான இராவணன்,
நல் செம்பொன்ஆரும் மதிள் - நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்கள்,
வம்புலாங்கூந்தல் - வாசனை மிகவும் உலவுகின்ற கூந்தலை உடைய,
வேயின் முத்து - மூங்கில்களின் முதிர்ந்த முத்துக்கள்,
நுண் நேர்மையன் - நுண்ணிய பொருட்களைக் காட்டிலும் அதிஸூக்ஷுமமான பெருமாள்.

(5-5) -- வெருவாதாள் வாய்வெருவி
--------------------------------
வெருவாதாள் - பயம் இல்லாதவளாய்,
என் குடங்கால் - எனது மடியில்,
திருவாளன் - பிராட்டியை ஆளுபவனான எம்பெருமான்,
கலை - வஸ்திரம்,
மெய்யம் மலை ஆளன் - திருமெய்ய மலையை இருப்பிடமாக கொண்டவர்,
சிலைஆளன் - அம்புகளை ஆளும் தன்மையன், { வில்லாண்டான் : பெரியாழ்வார் : பல்லாண்டு},
நறு துழாய் அலங்கல் - திருத்துழாய் மாலை,
கான் ஆயன் - காட்டிலே திரியுமவன்,
அம்மனைமீர் - அயல்வீட்டுப் பெண்களே!,
கடி மனை - கட்டுக் காவல் உள்ள மனை,
தன்னாயத்தோடு - தன் தோழிமார்களோடு,
பூவை பேணாள் - தான் வளர்த்துக் கொண்டிருக்கும் பூவை பக்ஷிகளை{கிளி, குயில், நாகணவாய்ப்புள்} கவனியாமல் இருக்கிறாள்,
தாதாடு வனமாலை - தாதுக்கள் நிரம்பிய வனமாலை,
பூமேல் மாது ஆளன் - பூவில் பிறந்த பிராட்டியின் வல்லவன்,
வளையும் சோரும் - கைவளைகள் கழள நிற்கின்றாள்,
நீலமலர் கண் மடவாள் - கருநெய்தல் பூ போன்ற கண்களை உடைய பரகாலநாயகி.

(5-6) கைம்மான மழகளிற்றை
--------------------------------
மானம் கை - நீண்ட கையை உடைய,
மழ களிறு - இளமையான யானை போன்றவனே,
ஆன் ஆயன் ஆனானை பசுக்களை மேய்க்கும் இடையனாக பிறந்த பெருமாள்,
தடங்கடல் - விசாலமான கடல்,
அழலாய் - அக்நி ஸ்வரூபியாய்,
பெருவிசும்பாய் - பரமபத நிர்வாகியாய்,
வெம் சினத்த கொடும் தொழிலோன் - மிகுந்த கோபத்தில் செய்யும் ஸம்ஹாரத் தொழில் வித்தகரான ருத்ரன்,
அம்சிறை புட்பாகன் - அழகிய சிறகுகள் உடைய கருடாழ்வாரின் ஸ்வாமி,
அந்தணன் - அழகிய தன்மை பொருந்தியவன்,
புலனைந்தும் செலவைத்து - பஞ்சேந்திரியங்களை விஷயத்தில் இருந்து அப்புறப்படுத்தி.

(5-7) -- பண்டை நான்மறை
-------------------------------
கேள்வி பதங்கள் -கேட்டறிய வேண்டிய வியாகரணமும்,
பிறங்கு ஒளி அனல் - மிகுந்த காந்தியை உடைய அக்நி,
மா இருங்குன்றம் - மந்தர் மலை,
மாசுணம் - வாசுகி நாகம்,
அளவி - சுற்றி,
சேயிரு விசும்பும் - மிக்க உயரத்தில் உள்ள ஸ்வர்க்காதி லோகங்கள்,
பகடு - இங்கு யானையைக் குறிக்கிறது,
வெம்கண் - நன்கு தீக்ஷ்ணமான கண்கள்,
வாள் எயிரு - வாள் போன்ற கூர்மையான பற்கள்,
சுரிகுழல் - சிறந்த கூந்தல்,
எரி விழித்து இலங்கு மணி முடி - அக்னி போன்ற மணிகள் பதித்த கிரீடங்கள்,
வரிசிலை - அழகிய வில்,
அரிகுலம் - நாதர் ஸமூஹங்கள்,
ஓமத்து உச்சியாய் - ஹோமங்களின் தலைவனான,
ஒரு காலுடை தேரொருவனாய் - ஒற்றைச் சக்கரம் கொண்டே தேர் நடத்தும்  சூரியன்.

(5-8) -- ஏழையேதலன்)
----------------------------------
எம்பி - என் தம்பி,
உம்பி - உன் தம்பி,
இங்கு ஒழி - இங்கு நின்றிடுவாயாக,
மாழை மான் மடநோக்கு - கபடமற்ற மானின் பார்வை போன்ற கண் நோக்குதல் கொண்ட சீதாப் பிராட்டி,
வாதமாமகன் - வாயு தேவனின் பெரிய புத்திரனான அனுமன்,
தகவினுக்கு - உபகாரங்களுக்கு,
மற்கடம் - குரங்கு,
தகவு - தகுதியான உதவி,
காமரு பொய்கை - அழகிய குளம்,
வேகு தாமரை - பொருந்திய தாமரை,
கொடிய வாய் விலங்கு - இங்கு முதலையைக் குறிக்கிறது,
கொண்ட சீற்றம் - ஏறிட்டுக் கொண்ட கோபம்,
வெம்சொலாளர்கள் - கொடிய சொற்களையே பேசுபவர்கள்,
நமன்தமர் - யமதூதர்கள்,
மாகம் - பரமபதத்தில்,
தகவில் காலனை - இரக்கமில்லாத காலன்,
உவனியம் - உபநயனம்,
ஏதலார் - சத்ருக்கள்,
வளம் கொள் மந்திரம் - சிறப்பு வாய்ந்த _திருமந்திரம்_,
அரசர்தம் குரிசில் - ராஜாதிராஜன்,
நும்மிடை பாவம் நில்லா - உங்களிடமிருந்து பாவங்கள் நீங்கும்.
------------------------------

 (5-9) -- கையிலங்காழிசங்கன் -- தென்திருப்பேர்நகர்.
--------------------------------
செறிபுனல் - அடர்ந்த சோலைகள்,
முகிலணவு - மேகமண்டலத்தளவு மேவி இருக்கும்,
பெருவரை மதிள்கள் சூழ்ந்த - மலை போன்ற மதிள்கள் சூழ்ந்த,
ஆகம் - மார்பு,
சக்கரச்செல்வன் - சக்கரம் கையிலேந்திய செல்வனான பெருமான்,
நக்கரி - (நகு + அரி) - வாய் திறந்து கொண்டு வந்த அரி - நரசிங்கம்,
விளங்கிழை - அழகாக விளங்குகின்ற ஆபரணங்கள் கொண்டவள்,
மலங்கு - ஒரு வகை மீன்கள்,
வேலை வண்ணனார் - கடல் போன்ற நிறத்தை உடைய பெருமான்,
வரிஅரவு - வரிகள் மிகுந்து காணப்படும் ஆதிசேஷன்.
-------

(5-10) -- தீதறு நிலத்தொடு - திருநந்திபுர விண்ணகரம்
--------------------------------
தீதறு நிலத்தொடு - சிறந்த பூமி,
மையவரி வண்டு - கரிய அழகிய வண்டுகள்,
நைவளம் - ஒரு வகை பண்,
உம்பர் உலகு - மேலுலங்கள்,
பைம்பொன் வருதும்பி - பசும்பொன் போன்ற நிறம் கொண்ட தும்பிகள்,
நம்பன் - நம்பிக்கைக்கு உரியவர்,
வயிறு அழல நின்ற - வயிறெரியும் படியாக,
மூள எரி சிந்தி - புகையும் படியாக நெருப்பை கொட்டி,
நொடி ஆம் அளவு- ஒரு நொடிப்பொழுதில்,
வெம்பிஎரி கானகம் - வெகு அதிகமாக தீப்பற்றி எரியக்கூடிய காட்டிலே,
விறல் - பெரு மிடுக்கன்,
கந்தம்  - பரிமளம்,
நண்ணுதல் - அடைதல் - சேர்தல்.
--------------------------------------------------------------------------


6. அகராதி -- பெரிய திருமொழி -- ஆறாம் பத்து

அரங்கனின் ஆழ்ந்த அனுபவத்தை அள்ளித் தந்த ஆழ்வார், அடுத்த இரு திவ்ய தேசங்கள் மங்களாசாசனம் செய்தார். அதன் பின் ஆச்சரியமாக இந்த ஆறாவது பத்தில் இரண்டே திவ்ய க்ஷேத்திரங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். இரண்டுமே அருகருகே உள்ள அருமையான திவ்ய தேசங்கள்.  திருவிண்ணகர் மற்றும் திருநறையூர்.  திருநறையூர் பெருமானை ஆச்சார்ய பாவத்தில் அனுபவித்து, மிகவும் அதிகமாக பாசுரங்களைப் பொழிந்துள்ளார்.  நாமும் சிறிது அவற்றின் இனிமையான அர்த்தங்களில்  நனைவோம். 

 (6-1) -- வண்டுணு நறு மலர் --  திருவிண்ணகர் -1 

வண்டுணு நறு மலர் - வண்டுகள் மது அருந்திய மணம் மிக்க மலர்களாலான மாலை,

நுதல் கண் - நெற்றிக் கண்ணனாகிய ருத்ரன்,

குழல் நிற வண்ண!  - கரிய திருமேனி உடையவனே!,

தழல் நிற வண்ண! - நெருப்பின் நிறம் கொண்ட பரமசிவனார்,

கலை தரு - மிகச் சிறிய வடிவம் கொண்ட,

நனி மலை - மிகப் பெரியதான மேரு மலை போன்ற,

உறுக்குறு நறு நெய் கொண்டு - உருக்கிய மணம் மிக்க நெய்யைக் கொண்டு,

வெருவுதலாம் - அச்சம் தருவதாக உள்ளது,

பூமரு - பூக்கள் எப்போதும் பூத்துக் காட்சி அளிக்கும்.


 (6-2) -- பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் --  திருவிண்ணகர் - 2 

புன்சொல் - அற்பமான வார்த்தைகள்,

வாயிலொட்டி - வாயினால் ப்ரதிக்ஞைகள் செய்து,

இறுத்தேன் - அனுபவித்துத்  தீர்த்தேன்,

மானேய் நோக்கியர் - மானைப் போன்ற கண் அழகு உடையவரான ஸ்த்ரீகள்,

ஆக்கை - சரீரம்,

பாண் தேன் - இசைப் பாட்டுடன் தேனைப் பருகுகின்ற வண்டுகள்,

மல்லா! - வலிமையுள்ள பெருமானே!,

வில்லா! - சார்ங்கத்தை உடையவனே!,

மல்லல் அம்சீர் - மிகுந்த அழகிய செல்வத்தை உடையதான,

ஆறா வெம் நரகத்து - ஓய்வில்லாத கொடிய ஸம்சார நரகத்தில்,

குமைக்க - ஹிம்ஸிக்க, 

மூவா - கிழத்தனம் போன்ற விகாரமற்ற,

மதி கோள் விடுத்த தேவா! - சந்திரனின் ஷயரோகத்தை போக்கிய தேவனே!,

புலவி - பூமிப்பிராட்டி,

கோதா! - விரும்பத் தகுந்தவனே!,

கோதில் செங்கோல் - தடையின்றி செங்கோல் செலுத்திய,

வேதா! - வேத ஸ்வரூபமானவனே!,

மருவார் - பகைவர்.


(6-3) -- துறப்பேனல்லேனின்பம்  - திருவிண்ணகர் - 3  

திறம்பாமல் கொண்டேன் - தவறாமல் மனத்தில் வைத்துக் கொண்டேன்,

கோனே! - ஸ்வாமி - அரசன்,

ஓட்டந்து - ஓடி வந்து,

சாந்தேந்தும் - குங்குமம் அணிந்த,

கொற்றவனே! - தேவாதி தேவனே!,

மையொண் கருங்கடல் - மை போன்ற அழகிய கருத்திருக்கும் ஸமுத்திரம்,

மணிவரையும் - சிறந்த பர்வதங்கள்,

முளிந்தீந்த - உலர்ந்து தீஞ்சுபோன,

வெம்கடம் - கடுமையான பாலைநிலம்,

நம்பீ! - பரிபூரணனே!,

கமலத்தடம் - தாமரைத்தடாகங்கள்,

தண் புறவின் - குளிர்ந்த தோட்டங்களில்.


 (6-4) -- கண்ணும்சுழன்று -- திருநறையூர் - 1

கொங்குண்குழலார் - மணம் பொருந்திய கூந்தலை உடைய மாதர்,

திங்கள் எரி கால் செஞ்சுடர் - சந்திரன் அக்னி காற்று சூரியன்,

கொம்பும் - வஞ்சிக் கொடி,

மலங்கு,வரால்,வாளை - மீன்களின் வகைகள்,

சலம் கொண்ட சொல்லார் - கபட வார்த்தைகள் பேசுபவர்கள்,

ஒண்காவியும் - அழகிய செங்கழுநீர்,

நனிசேர் நறையூர் - பெருமை பொருந்திய நறையூர்.


 (6-5) -- கலங்கமுந்நீர்கடைந்து - திருநறையூர் - 2 

முந்நீர் - ஸமுத்திரம் ,

துலங்கல் - கலக்கம்,

முரண் மார்வம் - முரட்டு மார்பு,

போழ்பட ஈர்ந்த - இரண்டு பிளவாகும்படி கிழித்துப் போட்ட,

மள்ளர்க்கு - உழவர்களுக்கு,

அலமந்து - அஞ்சி,

ஆன் - எருதுகளை,

பொறியார் - புள்ளிகள் நிறைந்த,

மஞ்ஞை - மயில்கள்,

போதகம்  - யானை - குவலயாபீடம்,

பகுவாய் - பெரிய திறந்த வாய்,

முந்துநூலீந்த - வேதமோதுவித்த,

கள்ளக்கமலம் - செறிந்த இதழ்களை உடைய தாமரைப்பூ,

பாரையூரும் பாரம் பூமியில் நடமாடுகிற மக்கள் பாரம்,

நாமத்திரள் - புகழ் பெற்ற பெயர்களை உடைய.


(6-6) -- அம்பரமும் பெருநிலமும் -- திருநறையூர் - 3 

குலவரையும் - குலபர்வதங்களையும்,

மணிவண்டு - அழகிய வண்டுகள்,

வகுளத்தின் மலர்மேல் வைகு - மகிழம்பூ மலர் மேல் தங்கி இருக்கும்,

வடமரத்தின் - ஆலமரத்தின்,

கோழு கயலாய் - பருத்த மத்ஸ்ய ரூபியாய் கொண்டு,

இன் வண்டாலும் - கூட்டமாக கூடி வண்டுகள் நடமாடும்,

மணி கொணர்ந்து - ரத்னங்கள் கொண்டுவந்து,

பவனம் மெய்யா - வாயுவைக் திருமேனியாகக் கொண்டு,

கவ்வை - ஆரவாரமுடைய,

தெய்வ வாள் கொண்டு - கோச்செங்கணான் என்னும் சோழ மன்னவன் திருநரையூர் நம்பியிடம் வேண்டி வாள் பெற்று,⚔️ அதன் பலத்தால் போரிட்டு வெற்றி பெற்றார் என்கிறது வரலாறு.

பைங்கண் - பசுமையான கண்கள்,

வெண்ணி ஏற்ற - 'வெண்ணி' என்னும் இடத்தில்  எதிர்த்து வந்த,

விலங்கல் பாய்ந்து - பொன்னியானது இடையே தடையாக உள்ள மலைகளை உடைத்துக் கொண்டு பெருகுகிறது.

வானாய் - பரமபத நாத்தனாய்,

விளந்தை வேளை - விளந்தை என்னும் ப்ரதேசத்து அரசன்,

முது துவரை - புராதானமான துவாரகா ராஜ்ஜியம்,

காலி பின்னே - கால்நடைகளின் பின்னே,

பொன்னி நாடன் - திருக்காவேரியை தனது ராஜ்யத்தில் கொண்ட சோழன்,

துவர்வாய் - சிவந்த அதரத்தை உடைய,

தார் ஆளன் - அழகிய மாலைகள் அணிந்தவன்,

பரிமா உய்த்த - குதிரை படை செலுத்தியவன்,

புல மங்கை குலவேந்தன் - அழகிய திருமங்கை நாட்டுத் தலைவன்.


 (6-7) -- ஆளும் பணியமடியேனை -- திருநறையூர் - 4 

விண்ட நிசாசரர் - பிரதிகூலரான ராக்ஷஸர்கள்,

விழவின் ஒலி ஓவா - ஓயாது நடைபெறும் உற்சவ கோலாகலங்கள்,

பனிசேர் முல்லை - குளிர்ந்த முல்லைப் பூக்கள்,

பானல் - கருங்குவளைப் பூக்கள்,

தெள்ளார் கடல் வாய் - தெளிவுடைய திருப்பாற்கடலில்,

வாளி துரந்தான் - அம்பு எய்தவன்,

புள் ஆர் புறவில் - பக்ஷிகள் நிறைந்த புறச்சோலைகளிலே,

விளியா ஆர்க்க - கோபித்துக் கட்ட,

சொல் ஆர் சுருதி - குற்றமற்ற சொற்கள் நிறைந்த வேதங்கள்,

சோமுச்செய்யும் தொழிலினோர் - ஸோமயாகம் முறையாக செய்யும் வைதிகர்கள்,

விறல் வாணன் - பலசாலியான பாணாசுரன்,

தோள் வனத்தை - பாணாசுரனின் 1000 தோள்களை ஆழ்வார்  தோள்களின் காடு என்று வர்ணிக்கிறார்,

பகுவாய் அலவன் - பெரிய வாய் உடைய ஆண்நண்டு,

நள்ளி - பெண் நண்டு,

மிடையா வந்த - கூட்டம் கூட்டமாக நெருங்கி வந்த,

கழல் மன்னர் - வீரக் கழல்கள் அணிந்த மன்னர்,

அடம்பும் - அடப்பம் பூ,

வரை மார்பு - மலை போன்ற திடமான திருமார்பு,

மன்னி உலகில் பாடுவார் - இந்த பாசுரங்களை உலகிலே ஆராய்ந்து பாடுபவர்கள்,

மன்னி - நெடு நாள் வாழ்ந்து.


 (6-8) -- மான் கொண்ட தோல் -- திருநரையூர் -- 5 

மான் கொண்ட தோல் - க்ருஷ்ணாஜினம் ,

மூழ்த்த நாள் - ப்ரளய காலத்தில்,

தூவாய - பரிசுத்தமான வாயை உடைய,

சேடார் பொழில் - இளமை பொருந்திய சோலைகள்,

கல்லார் - கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட,

கார் அரக்கன் - நீசனான ராக்ஷஸ ராஜன்,

செல்வ விபீஷணன் - பக்தியை மட்டுமே கைக்கொண்டு வந்த ஸ்ரீமான் ஆன விபீஷணன்,

வம்பு மலர் மேல் - பரிமளம் மிகுந்த தாமரைப்பூவிலே,

கட்டேறு - காவல் மிகுந்த,

மட்டேறு கற்பகத்தை - தேன் மிகுந்த கற்பக வ்ருக்ஷத்தை,

மண்ணின் மீபாரம் - மண்ணின் மீது உள்ள பெரிய சுமைகள்,

பொங்கு ஏறு - பொங்கிப் பெருகிய புகழ்,

கல் நவிலும் தோளான் - மலை போன்ற புஜங்கள் கொண்ட,

புத்தேளிர் - தேவதைகள்.


 (6-9) -- பெடையடர்த்தமடவன்னம் --  திருநறையூர் - 6 

கழி ஆரும் - உப்புக்குழிகளிலே நிரம்பி இருக்கின்ற,

பருமுடிகள் அவை சிதற - பருத்த (பத்து) தலைகளும் சிதறும்படி,

பலங்கனிகள் - பலாப்பழங்களில்,

கெழுமு - நெருங்கப் பெற்றிருக்கிற,

வளை கொண்ட வண்ணத்தில் - சங்கு போன்ற வெளுத்த நிறமுடைய பலராமர்,

துகில் படலம் - த்வஜபடங்களின் திரள்கள்,

குன்றாரும் திறள்தோளன் - மலை போன்ற திரண்ட தோள்வலிமை கொண்டவர்,

அகில் குறடு - அகில் கட்டைகள்,

குலை ஆர்த்த பழுக்காய் - குலை குலையாக நிறைந்த பழுத்த காய்கள்,

தலை ஆர்த்த - மரத்தின் உச்சியிலே நிறைந்திருக்கப் பெற்ற,

இள கமுகின் - இளைய பாக்குமரங்களின்,

திண் களகம் - திடமாய் சுண்ணாம்பு சாந்து கொண்டு அமைக்கப்பட்ட,

வண் களகம் - அழகிய அன்னப் பறவைகள்,

பண்களகம் பயின்ற  - பண்கள் + அகம் + பயின்ற -- பண்களுக்குள்ளே ஸாரமான பண்ணிலே அமைக்கப்பட்ட,

விண்களகத்து - விண்கள் + அகத்து -- மேல் உலகங்களுள் முக்கியமான பரமபதத்தில்.

----------

(6-10) -- கிடந்த நம்பி --  திரு நறையூர் - 7 

எறிஞரரணழிய - எறிஞர் + அரண் + அழிய -- சத்ருக்களின் கோட்டை அழியும் படியாக,

விடம் தானுடைய அரவம் - விஷம் மிகுதியாகக் கொண்ட காளிய நாகம்,

வளை பருப்பை - அதன் வளைந்த கொம்புகளை,

பூணாது - கட்டியிருக்கப் படாமல்,

தறுகண் வேழம் - ஒருவர்க்கும் அஞ்சுதல் என்பதே இல்லாத வட்டமான பார்வை கொண்ட குவலயாபீடம்,

நச்சி - வசிக்க விரும்பி,

பாடகத்துள் - திருப்பாடகத்தில் , பாடு + அகம் - பெருமை மிகுந்து ஸந்நதி கொண்ட,

கானவெண்கும் - கானம் + எண்கும் -- காட்டுக்கரடிகளையும்,

முசுவும் - 'முசு' என்னும் சாதிக் குரங்குகளையும்,

நின்ற வரையும் - ஸ்திரமாக நிற்கும் மலைகளும்,

வாவி - நடைவாவி -- கிணறு,

தடம் - தடாகங்கள்,

வீயும் - அழிந்து போகும்.

ஆழ்வார் , திருநறையூர் நம்பி இடமே சங்கு சக்கர இலச்சினை பெற்றதாக அறிகிறோம். ஆக காணும் இடமெல்லாம் திரு நாரணமே  என்கிறார். நாமும் ஆழ்வாரோடு அடுத்து பயணப்படும் வரை, அந்த தீஞ்சுவையிலேயே ஊறித் திளைத்திருப்போம். 

-------------------------------------------------------------------------------------------


7. அகராதி -- பெரிய திருமொழி -- ஏழாம் பத்து


 ஆழ்வாரோடு சேர்ந்து நாமும் நறையூர் நம்பியை ஆழ்ந்து அனுபவித்தோம்.  அடுத்தபடியாக திருச்சேறை , திருவழுந்தூர், திருச்சிறுபுலியூர், மற்றும் திருக்கண்ணமங்கை என்று அற்புதமான க்ஷேத்திரங்களாக ஆழ்வாரோடு  சேர்ந்து அந்தந்த எம்பெருமான்களையும், க்ஷேத்திரங்களின் அழகையும் கண்டு இன்புற்றோம். கலிகன்றியொலி செய்த இன்பப்பாடல்களின் அர்த்த ரஸத்தை சிறிது காண்போம்.

 (7-1) -- கறவா மடநாகு -- திருநறையூர் - 8  

---------------------------------

கறவா மடநாகு - பால் கறவாத இளம்பசு,

நறவார் பொழில் சூழ் - தேன் மிகுந்த மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட,

துற்றாக துற்றிய - ஒரு கவளமாக வாரி விழுங்கிய,

கல்லார் கடுங்கானம் - கற்கள் நிறைந்த கொடிய காட்டிலே, 

பனியேய் பரம்குன்றின் - பனி மிகுந்துள்ள சிறந்த ஹிமவத் பர்வதத்தில் உள்ள திருப்பிரிதி என்னும் திவ்ய தேசம்,

நித்திலத்தொத்தே! -   முத்துமாலை போன்றவனே! ,

தூயாய் - பரிசுத்தமானவனே!

ஆயா! - கோபாலனே. 


 (7-2) -- புள்ளாயேனமுமாய்! - திருநறையூர் - 9 

-------------------------------

புள்ளாய் - ஹம்ஸரூபியாய்,

நள்ளேன் - நேசிக்கமாட்டேன்,

எந்தன் மாடே வந்து - என்தன் அருகில் வந்து,

ஒண் சுடரே - அழகிய தேஜஸ்வரூபி,

மைம்மான வண்ணம் - மை போன்ற வண்ணம்,

நந்தாமல் - குறைவின்றி,

நன்னெஞ்சவன்னமன்னும் - நல்நெஞ்சம் + அன்னம் + மன்னும் -- நல்ல ஹ்ருதயம் பெற்ற அன்ன நடை உடையவளான பிராட்டி,

ஆக்கை - உடம்பு,

சொன்னீர சொல்மாலை - சொற்களாலேயே நீர்மையை விவரிக்கும் சொல் மாலை.

 

 (7-3) -- சினவிற் செங்கண் --  திருநறையூர் -- 10 

-------------------------------

சினவில் - சினம் + இல் - கோபத்திற்கு இருப்பிடமாய்,

அரிஏற்றை - சிங்கம் போலவும் காளை போலவும் மிடுக்குடன் இருப்பவன்,

தென்புலர்க்கு சேர் கொடான் - யமதூதர்களுக்கு கையில் காட்டிக் கொடுக்காது காத்தருளினான்,

உரங்களாலியன்ற மன்னர் -  வலிமைமிக்கவர் என்ற எண்ணம் மிகுந்த துரியோதனாதிகள்,

பரிகீறியை குதிரை (கேசி) உருவில் வந்த அசுரனைக் கீறியவன்,

எட்டனைப்பொழுது - எள் அத்தனை நொடிப்பொழுதாகிலும்,

பரவை துயிலேற்றை - பரந்த கடலில் துயில் கொண்ட ஏற்றமுடைய _பரமபுருஷன்_,

கோங்கின் தாழ் பொழில் - கோங்கு மரங்களினுடைய தழைத்த தோப்புகள்,

பாலை ஆக - பாலை என்கிற சிறந்த பண் போல மிக இனியவனாக, 

மகரம் திளைக்கும் - மீன்கள் துள்ளி விளையாடும்,

துனி - துன்பம்,

தஞ்சை ஆளி - தஞ்சை மாமணிக்கோயில் ஆள்பவன்,

தழலே புரை - நெருப்பைப்போன்ற, 

மணிக்குன்றினை அன்றி - நீல மணிமயமான பர்வதம் போன்ற நறையூர் நம்பியை அன்றி,

தோடுவிண்டு - இதழ்கள் விரிந்து.


 (7-4) -- கண்சோர வெங்குருதி -  திருச்சேறை

--------------------------------

அகடு - கீழ் வயிறு,

என் தலை மேலார் - என் தலை மேல் வீற்றிருக்க உரியவர்,

மண் சோர - மாண்பு போகும் படி,

அலர்மகள் - பெரிய பிராட்டியார்,

வம்பு அலரும் தண்சோலை - பரிமளம் வீசுகின்ற குளிர்ந்த சோலைகளை உடைய,

வண் சேறை - அழகிய திருச்சேறை,

வாள் எயிறு - ஒளிபொருந்திய கோரைப் பல்லானது,

தேராளும் தேவர்களை முறையே நடத்த வல்லவர், 

தாராளும் வரை மார்பன் - பூமாலைகள் அணிந்த மலை போன்ற திருமார்பை உடையவன்,

பை விரியும் வரி அரவில் - விரிந்த படங்களையும் புள்ளிகளையும் உடைய திருஅனந்தாழ்வான்,

ஐ அறிவும் கொண்டானுக்கு - ஐம்புலன்களின் அறிவையும் தன்விஷயமாக ஆக்கிக் கொண்ட,

மென்தளிர் போல் அடியினானை - மெல்லிய தளிர் போன்ற ஸுகுமாரன்,

வெம்கூற்றம் - கொடிதான எம் தேவதையானது,

விளைவயலுள் - பயிர்கள் தழைத்துள்ள வயலில்,

களைஞர் - களைகளை பிடுங்குமவர்கள்,

போதருகால் - நிகழும் காலம்எல்லாம்,

வாமான் தேர் - ஓடிவரும் குதிரைகள் பூண்ட தேரை உடைய,

தூமாண் சேர் பரிசுத்தமாய் மாட்சிமை தங்கியதால்


(7-5) -- தந்தை காலிற் பெருவிலங்கு - திருஅழுந்தூர்-1 

-------------------------------

மூவாவுருவின் - கிழத்தனமற்ற உருவத்தை உடையவரான,

நீரில் பணைத்த - தண்ணீரில் செழித்து வளர்ந்த,

கவுளோடு - கதுப்பிலே ஒதுக்கிக் கொண்டு,

பாரித்தெழுந்த - தவறுதலான வழியில் ஊக்கம் கொண்டு கிளர்ந்தெழுந்த,

கொம்பில் ஆர்த்த - கிளைகளினால் நிறைந்திருக்கும்,

கோதி மேய்ந்த - இலை தளிர்களைக்கீறி மது பானம் செய்த,

அம்பு அராவும் கண் மடவார் - அம்பு போன்ற கண்களை உடைய மாதர்கள்,

ஐம்பால் அணையும் - கூந்தல் வந்து சேரும்,

சிரங்களையிரண்டும் - சிரங்கள் + ஐந்து + இரண்டு - - தலைகள் பத்தும்,

அள்ளில் செறுவில் -  சேறு மிக்க விளை நிலங்களில்,

நீடு மாடம் - உயர்ந்த மாடங்கள்,

போழ்க - மேகத்தின் வயிற்றைத் தொட்டு கிழிக்க,

கொண்டல் - மேகம்,

அழல் கதிரை - சூரிய கிரணங்கள்,

ஆர்ப்பு -ஆரவாரம்,

மருங்கும் - இடை ,

அரவிந்த மலர் - தாமரைப்பூ,

நெருநலை - நேற்று,

பொன்னங்கலைகள் - அழகிய வஸ்திரங்கள்,

வில்லி - பூங்கொடிகள்.


(7-6) -- சிங்கமதாயவுணன் - திருஅழுந்தூர் - 2 

---------------------------------

சங்கம் இடத்தான் - சங்கம் இடக்கையிலும்,

தழல் ஆழி வலத்தான் - தீக்ஷணமான திருஆழியை வலக்கரத்திலும் கொண்டவர்,

கோ ஆனார் - க்ஷத்ரியர்கள் என்று பெயர் பெற்றவர் அனைவரும்,

விடையான் - ரிஷப வாகனனான _பரமசிவனார்_,

குல வேழம் - சிறந்த குலத்தில் பிறந்த யானை - _கஜேந்திரன்_,

பொன்றாமை - முடிந்து போகாமல்,

 செம்சொல் நான்மறை - அழகிய சொற்கள் நிறைந்த 4 _வேதங்கள்_,

உரியானை உகந்தவன் - யானைத்தோலை உகந்து தரிக்கும் _சிவனார்_,

பேரான் - திருப்பேர்நகர் எம்பெருமான்,

மருவார் - பகைவர்.


 (7-7) -- திருவுக்கும் திருவாகிய செல்வா - திருஅழுந்தூர்- 3 

----------------------------------

செய்ய கண்ணா - _புண்டரீகாக்ஷனே!_,

ஒழியாது அருவி - எப்போதும் சஞ்சலப் படுத்துதல்,

நெய்யார் ஆழி - கடைந்து பற்றற நெய்யிட்டிருக்கிற திவ்ய ஆயுதம் _சக்கரம்_,

விண்டான் - பகைவனான இரணியன்,

விண்புக - வீரஸ்வர்க்கம் சென்று சேரும் படி,

ஆன் உய்ய - பசுக்கள் ஜீவிக்கும் படி,

நகும் பரிசே - சிரிக்கும் படியாக,

ஆயா - _கோபாலக்ருஷ்ணனே!_

கடிஆர்கள - பூமிக்கு அரணாக உள்ள ஸமுத்திரத்தில் பள்ளி கொண்டுள்ள,

காளையர் ஐவர் - யௌவன பருவமுள்ள பஞ்ச இந்திரியங்கள்,

புள் கொடியாய் - _கருடத்வஜனே!_,

கூறை சோறு - துணியையும் சோற்றையும்,

அன்னம் மன்னு - அன்னப்பறவைகள் பொருந்தி வாழ்க 


 (7-8) -- செங்கமலத்திருமகளும் - திருஅழுந்தூர் - 4

--------------------------------

அம்கமலத்து அயன்அனையார் - அழகிய நாபீகமலத்தில் தோன்றிய பிரமனை ஒத்த அந்தணர்கள்,

செங்கமலத்திருமகள் - தாமரையில் வாசம் செய்யும் _ஸ்ரீதேவி_,

புவியும் - பூமி - இங்கு _பூதேவி_ யைக் குறிக்கிறது,

பரிமுகமாய் - ஹயக்ரீவ மூர்த்தியாய்,

பன்னுகலை நால்வேதம் - ஆறு அங்கங்களை உள்ளடக்கிய நால்வேதம்,

மலை திகழ் - ஸஹ்ய மலையிலிருந்து,

நிலைதிகழும் மலர்சுடரே! - நிலையாக விளங்குகின்ற ஒளிவடிவமானவனே!

கோள் முதலை - மலை போன்ற யானையையும் நீரில் அழுந்தச்செய்யும் சக்தி உடைய முதலை,

பூகம் தொக்க - பாக்கு மரங்கள் நிறைந்த,

சிறை புலம்பு வண்டு ஒலிப்ப - சிறகுகளை யுடையனவாய் ரீங்காரம் செய்யும் வண்டு ஒலி செய்ய,

செங்கற்குன்றம் - சிவந்த ரத்னங்கள் உடைய மேருமலை,

செழுமாடம் மாளிகைகள் - செழித்த உப்பரிகை உடைய சிறந்த வீடுகள்,

வென்றிதனிமுதல் சக்கரம் படை - வெற்றியையுடையதும் ஒப்பற்றதும் பிரதான ஆயுதமான சக்கரத்தை கையிலேந்தி,

வடகலையும் - சமஸ்கிருத பாஷை,

செம்தமிழும் - செவ்விய தமிழ்பாஷை,

அடுகணையால் - கொல்லும் தன்மையுள்ள அம்பினால்,

பகலவன் மீதியங்காத  இலங்கை - அச்சத்தால் சூரியன்  இலங்கை மீது வெப்பத்தை காட்டாதிருத்தல்,

திகழ் பூகம் - திகழ்கின்ற பாக்கு மரங்கள்,

கும்பம் மிகு - மஸ்தகம் பருத்திருக்கும்,

வம்பு அவிழும் - நறுமணப் வீசுகின்ற,

ஆடு ஏறு - கூத்தாடும் தொழிலில் வல்லவர்கள்,

நேமி அம்கை - சக்கரத்தை ஏந்திய அழகிய கையை உடையவர்.


(7-9) -- கள்ளம் மனம் விள்ளும் வகை -  திருச்சிறுபுலியூர் 

-------------------------------

விள்ளும் வகை கருதி - விட்டு நீங்கும் வகை விரும்பி,

முது பரவைத்திரை - பழையதான கடலின் அலைகளினாலுண்டான,

அறையும் புனல் - ஒலிக்கின்ற ஜலத்திலும்,

மழுவாளியொடு - மழவேந்திய _சிவனோடு_ கூடி,

முழு நீலமும் - பூர்த்தியாக நீல வண்ணத்தில் உள்ள நீலோத்பலமும்,

கழுநீரொடு - செங்கழுநீர்ப்பூக்களும்,

நீலம் மலர்க் கண்ணார் - கருநெய்தல் பூக்கள் போன்ற கண்களை மாதர்களிடத்திலே,

ஐவாய் அரவணை மேல் - 5 வாய்கள் கொண்ட ஆதிசேஷன் மீது சயனித்துள்ள,

கனல் உருவா! - தன்னிடம் பற்றில்லாதவர்க்கு நெருப்பு போன்றவனே!,

புனல் உருவா! - தன்னை அண்டியவர்க்கு குளிர்ந்த நீர் போன்ற தன்மையுடையவனே!,

சீரார் நெடுமறுகில் - சீர்மை பொருந்திய நீண்ட வீதிகளை உடைய,

காரார் வயல் மங்கை - கருமை பொருந்திய கனிகளை உடைய திருமங்கை நாட்டுக்கு.


 (7-10) -- பெரும்புறக்கடலை - திருக் கண்ணமங்கை 

-------------------------------

பெரும்புறக்கடல் விசாலமான இடத்தை உடைய கடல்,

அடல் ஏற்றினை - செருக்குடைய ரிஷபம் போன்ற ஏற்றத்தை உடையவன்,

அமுதம் பொதி இன்சுவைக்கரும்பு - அமுதத்தை நீராக பாய்ச்சி, விளைந்த கரும்பின் சாறு போன்ற மதுரமானவன்,

மலைமங்கை தன் பங்கனை - _பார்வதி தேவியை_ ஒரு பாகமாக கொண்ட _ருத்ரன்_,

தெள்ளியார் - தெளிந்த ஞானிகள்,

எய்ப்பினில் - தளர்ச்சி,

குருமாமணிக்குன்றினை - சிறந்த நீலமயமான மலைபோன்றவன்,( _கௌஸ்துப மணியைக்_ குறிக்கிறது,

துரங்கம் பட - குதிரை வடிவில் வந்த அசுரன் அழிய,

கண் நுதல் கூடிய நெற்றியில் கண்ணை உடைய _பரமசிவனார்_ ,

பண்ணினை - அனைத்து ஜீவனையும் ஆகர்ஷிக்கும் இசையாய் இருப்பவன்!.

 திவ்யமான திருநறையூர் அனுபவத்துடன் மற்றும் ஆச்சர்யமான நான்கு தலங்களின் எம்பெருமான் சிறப்பையும், நகர் எழிலையும் ஆழ்வாரோடு சேர்ந்து அனுபவித்தோம். அடுத்த திருத்தலம் செல்லும் வரை இந்த கலியன் ஒலிமாலையாகிய  கரும்பின் சாற்றை சுவைத்திருப்போம்.

-------------------------------------------------------------------

8. அகராதி -- பெரிய திருமொழி -- எட்டாம் பத்து

அனைவருக்கும் நமஸ்காரம். பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் என்னும் அருமையான திவ்ய தேசத்தின் அனுபவத்தை அதி ஆச்சர்யமான வகையில்  ஆழ்வார் நமக்கு தந்திருக்கிறார்.  மந்த்ரோபதேசம் பெற்ற கண்ணபுரத்துறையம்மானை, எட்டாம்பத்து முழுவதுமாய்,  நூறு பாசுரங்கள் கொண்டு ஆராதித்துள்ளார் ஆழ்வார். அதில் தாய் பாசுரமாக சில..மகள் தாபமாக சில... தானே திருமந்திர உபதேசம் பெற்று, அதன் சிறப்பு... மற்றும் அடியார்க்கு அடியவர் சிறப்பு.... என்று அறுசுவைக் குவியலில்  முழுமையாக திளைத்த நாம் இப்போது சிறிது ஒருசில பாசுர பதங்களின் அர்த்தத்தை பார்ப்போம். 


(8-1) -- சிலையிலங்கு பொன்னாழி - 1

சிலை - சார்ங்கம் - வில்,

தண்டு - கதை - கௌமோதகி,

கலை இலங்கு மொழியாளர் - சாஸ்திர பயிற்சி நன்கு விளங்கப்பெற்று மொழி ஆளுமை கொண்டவர்கள்,

திண்படை - நந்தகம்,

செறுவரை ஆசறுத்த - போர் வீரர்களை விரைவாக தொலைத்த, 

பொருவரை - போர் செய்ய வந்த மலைகள்,

துன்னுமாமணி முடிமேல் - நெருக்கமாக ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம்,

மகரக்குழை - சுறாமீன் வடிவமாக காணப்படும் காதணி,

அம்பவளம் - அழகிய பவளம் போன்ற சிவந்த அதரங்கள்,

தடங்கண் மலரவளோ - பெரிய கண்கள் உடைய பூவில் தோன்றிய பெரிய பிராட்டியார்,

வரையாகத்துள் - மலை போன்ற பெரிய திருமார்பில், 

செவ்வரத்த உடைஆடை - சிவந்த நிறம் கொண்ட சிறப்பாக உடுக்கப்பட்ட பீதாம்பரம்,

பண்டு - முன்பொருகாலம்.


(8-2) -- தெள்ளியீர் தேவர்க்கும் -2

தெள்ளியீர் - தெளிந்த அறிவு உடையவரே!,

வெள்ளியீர் - சுத்தமான ஸ்வபாவத்தை உடையவரே!,

வெய்ய விழுநிதி வண்ணர் - காய்ச்சின சிறந்த பொன் போன்ற நிறமுடையவர்,

வடவரை நின்றும் வந்து - வடக்கே உள்ள திருவேங்கடத்திலிருந்தும் வந்து,

தரங்கநீர் - கடல்நீர்,

துரங்கம் வாய் - குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அசுரன்,

கோயின்மை - அரசனற்ற தன்மை, கேட்பதற்கு யாருமற்ற அநீதி நிறைந்த தன்மை,

தேசு - தேஜஸ்,

சீர்மலி - பகவத் குணங்கள் நிறைந்து சீர்மை பெற்று,

முள்ளெயிறேய்ந்தில - முளைக்கின்ற  பற்களும் முழுதாக நிரம்பப் பெற்றாள் இல்லை.


(8-3) -- கரையெடுத்த சுரிசங்கும் -- 3

கனபவளத்தெழுகொடியும் - செறிந்திருக்கும் பவளங்கள் உள்ள நன்கு வளர்ந்ததான கொடி,

கரிவெருவ - யானை அஞ்சும் படியாக (குவலயாபீடம்),

மருப்பு - தந்தம்,

துங்கம் - உன்னதமாய்,

மணமருவு - பரிமளம் பொருந்திய,

அடல் அடர்த்து - யத்தத்திலே நெருக்கி,

தெண் கயங்கள் - தெளிந்த தடாகங்களானவை,

மடப்பாவை - பெரிய பிராட்டியார்,

பேராளன் - பெருமை பொருந்தியவன்,

நா மருவி - நாவிலே பொருந்தி பாடுபவர்கள்.


(8-4) -- விண்ணவர் தங்கள் பெருமான் -- 4

கோல்தும்பீ - கொம்புகளில் திரிகின்ற தும்பியே ,

விண்டமலரெல்லாம்  - விகஸித்த புஷ்பங்களில் எல்லாம்,

தார்மலி - மாலையிலே பொருந்திய,

ஏர்ஆர் மலர் எல்லாம் - துளபம் தவிர மற்ற எல்லா அழகிய புஷ்பங்களிலும்,

பாரை பிளந்த பரமன் - மஹா வராக அவதாரம் எடுத்து பூமியைப் பெயர்த்து கொணர்ந்த மேன்மையன்,

காமன் தன் தாதை - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ( ப்ரத்யும்நன் மன்மதனின் அம்சம்),

தாமம் - மாலையிலுள்ள,

சால ஊதாதே - மிகவும் ஒலி செய்வதைத் தவிர்த்து,

கொந்து - கொத்து கொத்தாக.


(8-5) -- தந்தை காலில் விலங்கற --5

மந்த மாருதம் - மெல்லிய தென்றல் காற்று,

தமியேன் - தனியேன்,

வளைவணற்குஇளையவன் - சங்கு போன்ற வெளுத்த நிறமுடைய பலராமனுக்கு இளையவன்,

வரைபுரைதிருமார்பில் - மலை போன்ற திருமார்பில் உள்ள,

வெண்திரை - வெண்மையான அலைகளாலுண்டான,

தழல் - நெருப்பை,

விலங்கில் - தணியப் பெறுதல்,

ஆழியான் - இராமபிரான் (அறுகாழி மோதிரத்தைக் கையிலே அணிந்தவர்),

சுடர் - சூரியன்,

எரியும் வெம்கதிர் - பிரகாசிக்கும் சூரியன்,

கரிய நாழிகை - கொடிதான நாழிகை - இரவுப்பொழுது,

முதுகயம் - ஸமுத்திரம்,

அடுசரம் - கொலைஅம்புகள்,

ஆயன் விலங்கல் வேயினது - இடையனான கண்ணபிரானின் மலைமூங்கிற் குழலினுடைய,

(விலங்கல் - மலை, வேய் - மூங்கில்),

கனம் செய் மாமதிள் - திண்மையாக அடைக்கப்பட்டுள்ள பெரிய மதிள்களை உடைய,

என் வளை நெக - கைவளை கழலும் படி,

செறுமணி - க்ரூரமான மணியினுடைய,

அனந்தல் - தூங்கிக் கொண்டிருக்கும்,

அன்றிலின் அரிகுரல் - அன்றில் பறவையின் தழுதழுத்த குரல்.


(8-6) -- தொண்டீருய்யும் வகை கண்டேன் -- 6

வடிக்கண் மடந்தை - கூர்மை பொருந்திய திருக்கண்கள் கொண்ட பூமிப்பிராட்டியார்,

மாநோக்கம் - சிறந்த கடைக்கண் பார்வை,

துளங்கா அரக்கர் - ஒருநாளும் கஷ்டமே அறியாத ராக்ஷஸர்கள்,

வெம்சமத்து - கொடிய போர்க்களம்,

பொன்ற - முடியும் படியாக,

 எழில் ஆர்பிலத்து - அழகிய பாதாளத்தில்,

வல்லி இடையாள் - கொடி போன்ற மெல்லிய இடை கொண்ட சீதாதேவி,

ஓமமாகி - ஹோமம் என்பதன் திரிபு,

நெடுபுணரி - ஓங்கின அலைகளை உடையதாய்,

கரு தாள் - வலிமையான கால்களை உடைய,

கலை மா - மாரீசனாகிய மான்,

காலார் - நன்கு ஊன்றிக் கொண்டு இருந்த,

கழுது - பிசாசு - பேய்ச்சி வடிவில் வந்த பூதனா,

கதமா - கோபமான கேசி என்பானையும்,

கழுதை - இங்கு கழுதை உருவில் வந்த தேனுகாசுரனைக் குறிக்கிறது.


(8-7) -- வியமுடைவிடையினம் -- 7

கயமிடை - தடாகங்கள் நெருங்கி இருக்கப்பெற்ற,

நயமுடை நடையனம் - அழகிய நடையையுடைய அன்னப்பறவைகள்,

இற - இற்றுவிழும்படி,

மிளைமுயல் - சிறு துளைகளிலிருந்தும் துள்ளும்  முயல்கள்,

கயல்துளு - கயல்மீன்களானவை துள்ளிக்குதித்து,

மணம்மலி - மகிழ்ச்சி மிகுந்த,

இகல் செய்து - போர் புரிந்து,

வரைமழை - கல்மழை,

மணிநிரை - அழகிய பசுக்கள்,

மயலுற - கலங்கி நிற்க,

நல்விரைமலர் - நல்ல பரிமளத்தை உடைய,

மதுகரம் - வண்டுகள்,

கொழுவிய செழுமலர் - மிகவும் செழுமை தங்கிய தாமரை மலர்கள்,

எரிஎழ - தீக்கொண்டு எரியும் படி,

பரிதியொடு அணிமதி - சூரியனும் சந்திரனும்,

படைசெல - கலப்பைகளை செலுத்த,

சுருதியொடருமறை - ஸ்வரத்துடன் கூடிய அருமையான வேதங்கள்,

மலர் வைகுகொடி - பெரிய பிராட்டியார்,

நிதி குவைகலமனு -  பொற்குவியல்களுடன் கூடிய மரக்கலங்கள் எங்கும் காணப்படும் கடல்,

முடிபுல்கு நெடுவயல் - நாற்று முடிகளோடு கூடிய விசாலமான கழனிகள்,

வலமனுபடைஉடை - வலக்கையில் திருஆழிப்படை கொண்டவர்,

விழுமிய இசையொடு - சிறந்த இசையொடு கூட.


(8-8) -- வானோரளவும் முது முந்நீர் --8 

 வலியுருவின் மீனாய - கடல் வெள்ளம் முழுவதும் தன் செதில்களில் அடங்கவைக்கும் அளவு பெரிய வலிமையுடைய மத்ஸ்ய அவதாரம்,

ஆனாவுருவின் - விகாரமற்ற உருவையுடையவன்,

மலங்கு - ஒரு வகை மீன் ஜாதி,

வளை மருப்பின் - வளைந்த கோரைப் பல்லை உடைய,

குருகு - நாரைகள்,

வேற்றோன் - பகைவனான ஹிரணியன்,

படிஆர் அரசு - பூமியில் நிறைந்து காணப்படும் க்ஷத்ரிய அரசர்கள்,

பாழியான் - மிடுக்குடையவன்,

மணம் நாறும் கைதை - பரிமளம் மிகுந்த தாழைகள்,

நாஞ்சில் - கலப்பை,

செம்தீ மூன்றும் - த்ரேதாக்னி எனும் மூன்று அக்னிகள்,

ஒற்றைக்குழையும் - ஒரு காதில் தோடுடன்,

உவரி ஓதம் - கடல் அலைகள்,

இருள் நாள் - இரவுப் பொழுது,

தேனார் இன்சொல் - தேன் போன்ற மதுரமான இனிய சொற்கள்.


(8-9) -- கைம்மான மதயானை -- 9

கைம்மான மதயானை - நீண்ட தும்பிக்கை கொண்ட மதம் கொள்ளும் இயல்புடைய யானை,

தரு - கற்பக விருக்ஷம் போன்றவனும்,

மானம் - பெரிய வடிவில்,

விலங்கல்  - மலை - இங்கு திரிகூட பர்வதத்தை குறிக்கிறது,

மிக்கானை - மிகச் சிறந்தவனும், தனக்கு மேற்பட்டு யாரும் இல்லாத தன்மையன்,

என்னுள் புக்கானை - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்,

தக்கானை - தகவுடையவனும், பரம க்ருபையுடனும்,

கொந்தார் - கொத்துக்கள் நிரம்பிய,

எஞ்சா - ஒருக்காலும் குறைதலில்லாத,

மஞ்சார் மாளிகை - வானளவு உயர்ந்த மாளிகைகள்,

இறைப்பொழுதும் - க்ஷணகாலமும்,

முற்றா மாமதி கோள் - பருவம் நிரம்பாத சந்திரனின் க்ஷயரோகம்,

கண் ஆர் - கண் திருஷ்டி விழுமாறு அழகான,

கடி கமழும் - பரிமளம் மிக்க,

வருநீர் வையம் - கடல் சூழ்ந்த பூமியிலே.


(8-10) -- வண்டார் பூமா மலர்மங்கை -- 10

பெருநீடும் - ஸமுத்ரங்களையும்,

ஆர்அழல் போல் - நெருப்பு போன்றதான,

சோத்தம் - அஞ்சலி பண்ணுபவர்கள்,

வாள் அவுணன் - வாள் கொண்ட ஹிரணியன்,

ஈண்டு - இப்போது,

நாட்டினாய் - நிறுத்திக்கொண்டாய்,

பண்டமாய் - நிதியாகக்கொண்டு.

கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுர எம்பெருமானை, ஆழ்வாரின் அமுதமாகிய பாசுரங்கள் கொண்டு திவ்யமாக அனுபவித்து, நமது  மனத்தை முழுமையாக ஆக்ரமித்த சௌரிராஜப்பெருமாளை  வணங்கி இன்புற்றோம். அடுக்கடுக்காக அர்ச்சாவதார அனுபவத்தை அற்புதமாக அள்ளிக் கொடுக்கும் ஆழ்வார், அடுத்ததான அற்புதத்தலம்  அழைத்துச்செல்லும் வரை, கருவறை போல் நின்று அருள் புரியும் கண்ணபுர அழகனிடம் ஆழ்ந்திருப்போம். 


9. அகராதி -- பெரிய திருமொழி -- ஒன்பதாம் பத்து

ஒன்பதாம் பத்தில் ஆழ்வார், நம்மை  மிகவும் அழகான அனுபவம் மிக்க  "திவ்ய தேசங்களுக்கு" அழைத்து செல்கிறார். ஒவ்வொரு திவ்ய தேச அனுபவமுமே எழில் மிக்கது தான். விபவாவதார எம்பெருமான்களின் அனுபவத்தோடு அர்ச்சாவதார மூர்த்திகளை,  "மானவேல்கலியன் வாயொலிகளாக", "மங்கையார் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல்களாக", மற்றும் "கலியன் ஒலிமாலையாக" கேட்டு,  கற்று, அந்த இன்தமிழ் பாடல்களின் அர்த்தங்களையும் அனுபவித்து இன்புற்றோம். இப்பொழுது அந்த    கலையார் பனுவல்களின் ஒருசில பதங்களின் பொருள்களைப் பார்ப்போம்.

(9-1) வங்கமாமுந்நீர் - திருக்கண்ணங்குடி

சங்கம் ஆர் அம்கை -  சங்கு பொருந்திய அழகிய திருக்கை களை உடையவன்,

சாம மா மேனி - நீல ( ஸ்யாமள) நிறத்தை உடைய சிறந்த திருமேனி அழகு பெற்றவன்,

எரிமூன்று - த்ரேதாக்நிகள்,

துளக்கமில் - கலக்கம் இல்லாத, 

சுடுபடை துரந்தோன் - ஜ்வலிக்கக்கூடிய சக்கரத்தை ப்ரயோகப்படுத்திய, 

வாதை வந்து அடர - கஷ்டம் நேர்ந்து அதிகரிக்க,

உகளும் மீனுருவாகி - களிப்புடன் உலாவுகின்ற மத்ஸ்ய ரூபியாக,

வரி அகட்டொளித்தான் - அழகிய தனது பெரிய செதிளுக்குள் ஒளித்தான்,

விலங்கல் மாமேனி - மலை போன்ற பெரிய வடிவம் உடைய மேனி,

குலைமலி கதலி குழுவும் - குலைகளாலே நிறைந்த வாழைகளின் தோப்பும்,

சூதம் - மாமரங்கள்,

அரவநீள் கொடியோன் - ஸர்ப்ப த்வஜனான துரியோதனன்,

கலை உலா அல்குல் காரிகை - நல்ல ஆடை உலாவுகின்ற இடையை உடைய சீதாப்பிராட்டி,

மாதவி - குருக்கத்தி.

(9-2) - பொன்னிவர்மேனி - திரு நாகை

தோடு அவிழ் நீலம் - இதழ்கள் மலர்ப் பெற்ற நீலோத்பலங்கள்,

பாடக மெல்லடியார் - பாத கடகம் அணிந்த மெல்லிய பாதங்கள் கொண்ட பெண்டிர்கள்,

சேடர் - இளம் பருவமுள்ளவர், 

ஆடகம் - 'ஹாடகம்' என்னும் வடசொல்லின் திரிபு - பொன் ஆபரணம்,

வேய் இரு சோலை  - மூங்கில் மயமான பரந்த சோலைகள்,

கோழியும் - "உறையூர்" தலத்துக்கு கோழி என்றும் ஒரு பெயர் உண்டு,

அம்கையும் பங்கயம் - அழகிய கைகளும் தாமரையே,

மஞ்சுயர் - மேக மண்டலத்தளவும் உயர்ந்த,

(9-3) - தன்னை நைவிக்கிலேன் - திருப்புல்லாணி -1

முருகு வண்டுண் மலர் - வண்டுகள் தேன் உண்ணப்பட்ட மலர்,

தாது மல்கு - பூந்தாதுக்கள் நிறைந்த,

மணி உந்து -  ரத்னங்கள் கொழித்துத் தள்ளுமிடமாய் உள்ள,

புணரி ஓதம் - கடலலைகளானவை,

பணிலம் - சங்குகளையும், 

நாழல் - கோங்கு‌ மரமும், குங்கும மரமும்,

தூமடல் கைதையும் - வெளுத்த மடல்களை உடைய தாழைகளும்,

அள்ளல் பழனங்களும் - சேறுமிக்க வயல்களும்,

புதம்செய்து - தாவிக் கொண்டு,

அலமும் - கலப்பையும்,

ஒளிமாமலர் பாதம் - ஒளிபொருந்திய சிறந்த திருவடித் தாமரைகள்,

கலங்கல் இல்லா புகழான் - கலக்கம் இல்லாத புகழை உடையவன்.

(9-4) - காவார் மடற்பெண்ணை - திருப்புல்லாணி -2

காவார் மடல் - சோலை எங்கும் நிறைந்த மடல்களை உடைய,

பெண்ணை - பனை மரத்தில்,

அரிகுரலும் - தழுதழுத்த த்வனியும்,

ஏவாய் - அம்பு,

எஃகு - பொதுவாக ஆயுதங்களை குறிக்கும், இங்கு வேல் படையை குறிப்பிடுகிறார்,

பொன்னங்கழிக் கானல் - "பொன்னங்கழி" என்னும் கடற்கரை நிலங்கள்,

நூல் பயந்தாற்கு - வேத சாஸ்திரங்களை காத்தருளிய பெருமானுக்கு,

செவ்வி அறியாது - முறையறியாமல், 

தெய்வச்சிலையாற்கு - திவ்யமான வில்லை உடைய பெருமான்,

அஞ்சுடரோன் - அழகிய கிரணங்கள் கொண்ட சந்திரன்,

ஓதம் - கடல் ,

உன்னுவரே - விரைந்து எழும்புதல்.

(9-5) - தவளவிளம்பிறை - திருக்குறுங்குடி -1

தவள இளம்பிறை - வெண்மையான பாலசந்திரன்,

தாதவிழ் மல்லிகை - தாதுக்கள் விரிகிற மல்லிகை,

ஊதை - குளிர்காற்று,

இமில் - 'திமில்' என்னும் மாட்டின் முகப்பு,

காரிமிலேற்றணர் - கார்+இமில்+ஏறு+அணர் - கறுத்த முகப்பை உடைய காளைகளுடைய கழுத்திலே,

எல்லியும் - இரவும்,

ஏசிலும் ஏசுக - பழி சொன்னாலும் சொல்லட்டும் ,

ஐங்கணை வில்லி - ஐந்து வகை வில்லை உடைய மன்மதன்,

தண்பணை - குளிர்ந்த மரக்கொம்புகள்,

கோவலர் கூத்தன் - இடைச்சாதிக்கு ஏற்ற கூத்துக்களில் வல்லவரான பெருமான்,

ஏவலம் - எய்வதில் வல்லமை,

இன்று தாறும் - இன்று வரைக்கும்.

(9-6) - அக்கும் புலியினதளும் - திருக்குறுங்குடி -2

அக்கும் - எலும்பையும்,

புலியினதளும் - புலியின் தோலையும், 

கொக்கின் பிள்ளை - கொக்கின் குட்டி,

வெள்ளிறவு - ஒருவகை ஜாதி மீன்,

பணைநிலம் - நீர் நிலம்,

மன்று - நான்கு சந்திப்பு முனை,

உரமும் கரமும் - மார்பும் கையும்,

கவ்வை களிறு மன்னர் - பேரொலி கொண்ட யானைகள் உடையவரான அரசர்கள்,

வல்லி - கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய, 

நின்ற வினையும் - ஸஞ்சித கர்மங்கள்,

துயரும் கெட - ப்ராரப்த கர்மங்கள ஒழிந்து போகும் படி,

கலையார் பனுவல் வல்லான் - சாஸ்திர ரீதியாக அனைத்து லக்ஷ்ணங்களுடன் கவிதை புனைய வல்லவர்.

(9-7)  - தந்தை தாய் மக்களே - திருவல்லவாழ்

துன்னு மாமணி முடி - நெருங்கின ரத்னங்கள் இழைத்த மணிமுடி,

பூண் உலாம் - ஆபரணங்கள் அணிந்த,

பண் உலாம் - ஆசை விளங்குகிற பேச்சு,

உருவின் ஆர் பிறவி சேர் - ஸூக்ஷ்ம சரீரத்தோடு கூடிய பிறவி அடைந்து,

திருவின் ஆர் - ஸ்ரீ யோடு கூடின,

எரி, நீர், நிலம், கால் - அக்நி, ஜலம், பூமி, காற்று,

அஞ்சு சேர் ஆக்கையை  - பாஞ்ச பௌதிகமான சரீரம்,

சந்து சேர் - சந்தனமணிந்த,

வெள்ளியார் - பாசுபதர்கள், 

பிண்டியார் - ஜைனர்கள்,

போதியார் - பௌத்தர்கள்,

மறைவலார் - வேதம் வல்லவர்கள்.

(9-8) - முந்துறவுரைக்கேன் - திருமாலிருஞ்சோலை - 1

முந்துற உரைக்கேன் - முக்கியமாக சொல்கிறேன் கேள்!,

அந்தரம் ஏழு - ஏழு தீவுகள், 

மால் - உயர்ச்சி,

இண்டையும் - பூமாலையையும்,

சுடர் முடி - சோதிமிக்க கிரீடத்தை உடையவரும்,

கணி வளர்- சோதிடர்கள்,

கவண் இடை துரந்த மணி - வேடர்கள் கல்லுக்கு பதில் ரத்னங்கள் வைத்து கவண் எரியும்,

சூர்மையில் ஆய - கொடுமையோடு கூடின,

கார்மலி வேங்கை - மேக மண்டலம் வரை ஓங்கி வளர்ந்த வேங்கை மரங்கள்,

வணங்கல் இல் - வணக்கமற்ற - பணிவு சிறிதுமற்ற,

மடங்கல் - சிங்கமானது,

புணரி - அலைகளானவை,

புதம் மிகு - மேகங்கள் நிறைந்த,

களிற்றின் கவுள் வழி - யானையினுடைய கபோலத்தின் வழியே,

களி - மத ஜலத்தை,

பதம் மிகு பரியின் - முயற்சி மிக்க குதிரை வடிவான கேசி அசுரனை,

தாழ் சினை - தாழ்ந்த கிளைகளினுடைய,

வரை மகளிர் - குறிஞ்சி நில மகளிர்களான குறத்திகள்.

(9-9) - மூவரில் முன் முதல்வன் - திருமாலிருஞ்சோலை -2

பூவலருந்தி - பூ அலர் உந்தி - திருநாபியில் மலர்கின்ற தாமரை பூவிலே,

புனை வளர் - புன்னை மரங்கள் வளரப்பெற்ற,

கனைகழல் -  வீர 'தண்டை' அணிந்த திருவடி,

திண்திறல் மாகரி - மிக்க வலிமை வாய்ந்த யானைகள் சேரப்பெற்ற,

தானவன் - அசுரன்(மஹா பலி),

கெண்டை ஒண் கண்ணி - கெண்டை மீன் போன்ற கண் அழகுடைய என் மகள்,

புலம்புரி நுலவனை - மனோஹரமான யஜ்ஞோபவீதத்தை உடையவன்.

(9-10) - எங்களெம்மிறை எம்பிரான் - திருக்கோஷ்டியூர்

எவ்வம் நோய் தவிர்ப்பான் - துக்க ஹேதுவான நோய்களை நீக்கி அருள்பவர்,

மௌவல் மாலையோடும் - சாதி மல்லிகை பூக்களோடும்,

எமக்கு ஒள்ளியான் எனக்கு தன் அழகைக்காட்டித் தந்தவனும்,

ஏறு ஏறி - ரிஷப வாகனம் கொண்ட ஈசன்,

புல்கி - தழுவி,

மலர் தொங்கல் - பூமாலை,

மாகம் - ஆகாயம்,

நாவலம்புவி மன்னர் - ஜம்பூத்வீபத்தில் உள்ள அரசர்கள்,

பலவின்கனி - பலாப்பழங்களோடு,

அரிமா - குதிரை ஆகிற விலங்கு,

சேல்கள் பாய் கழனி  - மீன்கள் துள்ளி விளையாடும் நிலங்களை உடைய.




அற்புதமாக திவ்ய தேசங்களில் உள்ள இயற்கை வர்ணனை, மாட மாளிகைகளின் அமைப்புக்கள், ஆங்காங்கு வசித்து வந்த மறையாளர்களின் மேன்மைகள் .... எல்லாவற்றிற்கும் மேலாக விபவாவதார அனுபவங்கள் .... கலங்கலில்லாப்புகழான் கலியனொலி மாலை என்று ஆழ்வாரே தன்னுடைய பனுவல்களைப் பற்றி கூறுகிறார். அத்தகைய அறிவு தரும் பெரிய திருமொழியாகிய மாலையின் ஒரு ஒரு மணியையும் ஆழ்ந்து கற்று,  ஆழ்வாரின் கவித்துவத்தோடு அனுபவித்து எம்பெருமானின் அருளைப் பெறுவோம்.










FEATURED POST

MUSINGS ON KRISHNA'S DANCE

  MUSINGS ON KRISHNA'S DANCE Krishna, the charmer seems to have displayed a variety of dance forms in His mesmerizing avatAra. He is ref...