நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த பூதவேந்தே!

 

  'இன்கவி பாடும் பரமகவிகள்' , 'செஞ்சொற்கவிகள்' என்று நம்மாழ்வாராலும், 'செந்தமிழ் பாடுவோர்' என்று திருமங்கையாழ் வாராலும் புகழப்பட்ட முதலாழ்வார்கள் மூவருமே சிறந்த தமிழில் பாசுரங்கள் கொடுத்ததுடன், அற்புதமான ஆழ்ந்த அர்த்தங்களுடனும் கொடுத்துள்ளார்கள். ஒவ்வொன்றுமே  மணி மணியான பாசுரங்களாக உள்ளது.

திருக்கோவலூர் ஆயனாரின் அருளை ஏக காலத்தில் பெற்ற மூவரின் பிரபந்தமுமே சிறந்ததே! இதில் இரண்டாமவரான "பூதத்தாழ்வார்" பாசுர சிறப்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.

"அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக  ஞானச்சுடர் விளக்கேற்றி, நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்தேன்" என்று இந்த ஆழ்வாரே முதல் பாசுரத்தில் கூறிக் கொள்கிறார். இவரும் அந்தாதித்தொடையில் நூறு பாசுரங்களாக பரமபக்தியை விளக்கும் வகையில் அருளிஉள்ளார். பரமனின் இணைஅடிகள் இரண்டு மட்டுமே தான் நமக்கு வழிகாட்டி என்பதைக் காட்டும் விதமாக, தனது பிரபந்தத்தில் 20க்கும் மேலான இடங்களில் பெருமாளின் கழலிணை அருள் பற்றியும், திருவிக்ரமனாக தாவி அளந்த சேவடியையும் அந்தப் "பொற்பாதங்கள்" பற்றி வாழ்ந்தால், நாம் உய்ந்து போகலாம் என்றும் அருமையாகக் கூறுகிறார். இதனைக்கூறும் ஆழ்வாரின் தேனின் இனிய தமிழ் பதங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

* பெருந்தவத்தோர் காண்பரே காரோதவண்ணன் கழல், (6)

* பொன்மலர்சேவடியை ஓராழிநெஞ்சே! உகந்து,(7)

* அரவணையான் பாதம்(12)

*அன்று இடரடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே?(13)

*வாமன் திருமருவு தாள் மருவு சென்னியரே(21)

*வராகத்து அணியுருவன் பாதம் பணியுமவர்கண்டீர்(31)

*மகிழ்ந்தது உன் பாதமே போற்றி(32)

*மணிவண்ணன் பாதமே நீமறவேல்நெஞ்சே!(41)

*செங்கமலநாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் தண்கமலமேய்ந்தார்தமர்(69)

*யானே இருந்தமிழ்நன்மாலை இணையடிக்கேசொன்னேன்..(74)

*உறுக்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் நற்பாதம்..(77)

*தவம் செய்து நான்முகனேபெற்றான் தரணி நிவந்தளப்ப நீட்டிய பொற்பாதம்..(78)

*மிகக்கண்டேன் ஊன்திகழும்நேமி ஒளிதிகழும் சேவடியான்..(81)

*நரங்கலந்த சிங்கமாய்க்கீண்ட திருவினடியிணையே...அமுது(84)

*பின்னால் அருநரகம் சேராமல்,...முன்னால் வணங்கமுயன்மினோ... எல்லாம் அளந்தானவன் சேவடி(91)

*அறைகழல சேவடியான்! செங்கணெடியான்..(99)

அற்புதமான வர்ணனை வார்த்தைகள் அல்லவா! எடுத்து இங்கே காட்டியது சில மட்டுமே....நாமும் அந்தச் சேவடியை வணங்கி வழிபெறுவோம்.

------

இதுபோல் எம்பெருமானின் பல அவதாரவிஷயங்களை, மிக அழகாக சுருக்கமாக தெளிவான வார்த்தைகள் மூலம் பாசுரங்களில் அடக்கி அத்புதமாக  பாடியிருக்கிறார்... ஒன்றிரண்டைக் காண்போம்..

நீயன்றுலகளந்தாய் நீண்டதிருமாலே!
நீயன்றுலகிடந்தாயென்பரால் -நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய்மாகடலை, பேரோதமேனிப்பிரான்!(30)

.......அறியாமை, மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று எண்கொண்டுஎன்நெஞ்சே! இரு (36)

இன்னும் ஒரு அழகிய அர்த்தபுஷ்டியான  வெண்பா பாருங்கள்..

உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து அருளும் பெருமான் இருக்க, பெருமானைத் தொழுவதற்கு தாமரைப்பூக்கள் நிறைந்திருக்க, எம்பெருமானை ஏற்றித்தொழ பொழுதும் பூரணமாக இருக்க, வாமன மூர்த்தியின் தாள் பற்றி பகவான் நாமம் சொல்லி, சரணாகதி செய்து பரமபதம் அடையாமல் ... எங்ஙணம் மக்கள் நரகம் செல்கின்றனர்? என்று அதிசயித்து கேட்கிறார் ஆழ்வார்.

 தாமுளரே தம்முள்ளமுள்ளுளதே, தாமரையின் பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே, வாமன் திருமருவு தாள்மருவுசென்னியரே, செவ்வே அருநரகம் சேர்வதரிது.(21)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்று நாச்சியார் கூறியது போல்,  வேதம் அனைத்திலும் விவரித்து சொல்வது என்னவென்றால் ....எம்பெருமான் மாதவன் பேர் ஓதுவதே! என்று அழகாக கூறுகிறார் பாருங்கள்.

ஓத்தின்பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன் பேர் ஏத்தும் திறமறிமின் ஏழைகாள்!-ஓத்ததனை வல்லீரேல் நன்று, அதனை மாட்டீரேல், மாதவன்பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.(39)( ஓத்து - வேதம்)

இப்படி ஒவ்வொரு சுவையாக கூறிக்கொண்டே செல்லலாம்.‌ நாரணனார்க்கு ஆழ்வார் அளித்த ஞானத்தமிழை நாமும் நன்கே பயின்று, உத்தமனாம் மாதவனின் நாமம் ஓதி, மணிவண்ணன் மலரடி பணிந்து நலம் பெறுவோம்.

ஆழ்வார் திருவடிகளே சரணம்!

அடியேன், 

திருமதி கோதை லட்சுமி ஸ்ரீனிவாசன்


No comments:

Post a Comment

FEATURED POST

PERIYAZHVAR TIRUMOZHI DECAD 1